×

தாராவி முதல் சென்னை வரை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய காய்ச்சல் முகாம்கள்: கிராமங்கள்தோறும் செயல்படுத்தப்படுமா?

சென்னை: மக்கள் நெருக்கம் அதிகம் இருந்த தாராவி மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் காய்ச்சல் முகாம் முக்கிய பங்காற்றியுள்ளது. எனவே இந்த திட்டத்தை  கிராமங்கள் தோறும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா பாதிப்பு  தீவிரமாக பரவி வந்தது. இதை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு எடுத்த நடவடிக்கைதான் காயச்சல் முகாம். இதன்படி மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு சோதனை  செய்து அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தினர். இதன் பலனாக தாராவியில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது.

தற்போது தினசரி  ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தாராவியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.  தாராவி போன்று சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே இருந்தது. இதன்படி தாராவியில் செயல்படுத்திய காய்ச்சல் முகாம் திட்டத்தை சென்னையில் செயல்படுத்த தொடங்கியது சென்னை மாநகராட்சி. இதன்படி  தினமும் காலை 8.30 முதல் காலை 11 மணி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. இதன் பிறகு 11.30 மணி முதல் 1.30 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கே சென்று காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனைகள் மூலம் நேரடியாக பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

தற்போது வரை சென்னையில் தினசரி  500க்கு மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த மே 8ம் முதல் ஜூலை 16ம் தேதி வரை 18 ஆயிரத்து 127 காய்ச்சல் முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 25 ஆயிரத்து 311 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  இவர்களில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள 58 ஆயிரத்து 154  பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில் அதிக அறிகுறி உள்ள 54 ஆயிரத்து  145  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தொற்று  பாதிப்பு அதிகரித்து வரும் அண்ணா நகர் மண்டலத்தில் 2480  பேருக்கு சோதனை செய்யப்பட்டது.

சென்னையிலும் சரி, தாராவியிலும் சரி காய்ச்சல் முகாம் மூலம் தொற்று உள்ளவர்களை முன் கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்ததுதான்  தொற்று குறைவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழகத்தின் பிறகு பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக  மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, சென்னையில் செயல்படுத்திய காய்ச்சல் முகாம் போன்று அனைத்து மாவட்டங்களிலும் இந்த  திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 குறிப்பாக தற்போது கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே தினசரி அனைத்து கிராமங்களிலும் காயச்சல் முகாம் நடத்தி அறிகுறி உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். இந்த திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தினால்தான் கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணியிடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளதால் பணியிடங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, தொழிற்பேட்டைகளில் தினசரி நடத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Influenza camps ,Dharavi ,villages ,Chennai , Dharavi, Chennai, Corona
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்