×

லட்சக்கணக்கில் கடன் வாங்கி ரோஜா செடிகளை காப்பாற்ற போராடும் ஓசூர் விவசாயிகள்: ரூ.1க்கு ரோஜா பூ விற்பதால் வேதனை

ஓசூர்: கொரோனா ஊரடங்கால் ரோஜா வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் சந்தைகளில் ஒரு ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், செடிகளை பல லட்சம் செலவு செய்து பராமரிக்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் சுமார் 1,500 ஏக்கரில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிகப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் 40க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. ஓசூர் விவசாயிகள் ரோஜா மலர்களை இந்தியாவில் பல மாநிலங்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மலர் சாகுபடி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மலர் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஊரடங்கு துவங்கிய மார்ச் முதல் தற்போது வரையிலும் ஓசூர் ரோஜா மலர்களை அண்டை மாநிலங்களுக்கு கூட விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு முன்பு (ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்) ஒரு ரோஜா ₹6க்கும், 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ₹120க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கால் வர்த்தகம் முடங்கியதால் உரிய விலை கிடைக்காமல் மலர்கள் மற்றும் செடிகளை பறித்து குப்பைகளில் கொட்டி வந்தனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ஊரடங்கால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரோஜாக்களை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. இதனால், உள்ளூர் சந்தைகளில் ஒரு ரோஜாவை 1 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். ரோஜாவால் எந்த லாபமும் இல்லாத போதிலும் செடிகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தால், பல லட்சம் கடன் வாங்கி பராமரித்து வருகிறோம்.  எனவே, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ரோஜா விவசாயிகளுக்கு அரசு உதவிட வேண்டும் என்றனர்.

Tags : plants , Hosur farmers ,rose plants ,borrowing millions,Pain ,selling roses
× RELATED பீட்ரூட் கீரை மசியல்