×

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த நேரக் கட்டுப்பாடு: எல்கேஜி.க்கு 30 நிமிடம் மட்டுமே நடத்தலாம்

புதுடெல்லி: பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எந்தெந்த வகுப்புகளுக்கு, எவ்வளவு நேரம் நடத்தலாம் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வியாண்டு தொடங்கிய நிலையில், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் வகுப்பறையில் படிப்பது போல மாணவர்கள் ஆன்லைனில் அதிக நேரம் படித்தால் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு நேரம் வகுப்பு நடத்தலாம் என்பது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
* எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்.
* 1 முதல் 8ம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 45 நிமிடம் என்ற அளவில் 2 வகுப்புகளை எடுக்கலாம்.
* 9 முதல் 12ம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 30-45 நிமிடம் என்ற அளவில் 4 வகுப்புகளை எடுக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 24 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீட்டிலேயே மாற்று வழியில் தரமான மற்றும் பாதுகாப்பான கல்வி வழங்கிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளால் ஆன்லைன் வகுப்புகளில் தரமான கல்வியை மேம்படுத்த முடியும்’’ என்றார்.

* புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளை நீக்கக் கூடாது
புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த புள்ளி விவரங்களை அனைத்து மாநில, யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் திரட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் அக்குழந்தைகளை பதிவேட்டில் இருந்து நீக்கக் கூடாது. எந்த நேரத்திலும் அவர்கள் மீண்டும் திரும்பி வர வாய்ப்புள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல கிராமப்புறங்களில் புலம்பெயர்ந்து வந்த குழந்தைகளிடம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிக அடையாள ஆவணங்களை கேட்க கூடாது. சில ஆவணங்களுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். டிசி, முன்பு படித்த வகுப்பு சான்றிதழ் போன்றவை கேட்டு நெருக்கடி தர கூடாது,’’ எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : school students ,LGG , School student, online class, conduct, time control, lkg., 30 min
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு