×

நேபாள பிரதமர் ஒரு பைத்தியக்காரர்; அவரது ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும் : கடவுள் ராமர் நேபாளி என கூறியதற்கு இந்து மதக்குருக்கள் கண்டனம்!!

அயோத்தி: உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, தங்களது நாட்டில் தான் உள்ளது என்றும் ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி கூறியிருப்பதற்கு அயோத்தியில் உள்ள  இந்து மதக்குருக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். காத்மாண்டுவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில் உள்ளது. ராமர் இந்தியர் கிடையாது, அவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் நேபாளி, என தெரிவித்து அடுத்த சர்ச்சைக்கு திரி கொளுத்திப்போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அயோத்தியில் உள்ள இந்து மதகுருக்கள் ஒலிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ராமர் கோயில் டிரஸ்ட் உறுப்பினரான மஹந்த் திதேந்திர தாஸ் கூறுகையில், ராமர் இங்கு இருக்கும் சராயு ஆற்றுக்கு அருகே பிறந்தவர். அயோத்தியை சேர்ந்தவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இந்தியர்களுக்கு உள்ளது. சீதை நேபாளத்தைச் சேர்ந்தவர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், ராமரை நேபாளி என்று கூறுவது தவறு, என்றார்.

இந்து ராஜ்யமாக இருந்த நேபாளம் இன்று பாகிஸ்தான், சீனாவின் கைகளுக்கு சென்றுள்ளது. நம்முடைய இந்து மத புத்தகங்களில் சராயு ஆற்றின் கிழக்கே இருக்கும் பகுதி அயோத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தில் சராயு ஆறு இல்லை. அவ்வாறு இருக்கும்போது எப்படி ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று கூற முடியும். இன்னும் இரு மாதத்திற்குள் அவரது ஆட்சி கவிழும் என்று ராம் தல் டிரஸ்ட் உறுப்பினர் கல்கி ராம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மதகுருவான மஹந்த் பரம்மஹம்ச ஆச்சார்யா தெரிவித்து இருக்கும் செய்தியில், ராமர் உலகிற்கே சொந்தமானவர். நேபாள மக்கள் ஒலிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். ஒலி ஒரு பைத்தியக்காரர் என்று சாடியுள்ளார்.

Tags : madman ,Nepali ,Nepal ,God Ram ,clerics ,Ram ,clergy , Nepal, Prime Minister, Rule, God, Ram, Nepali, Hindu clergy, condemnation
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது