டெல்லி : இந்தியா-சீனா இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
லடாக் எல்லை பகுதியில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு அருகே ஜூன் 15ம் தேதி அன்று இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதில் இருதரப்பிலும் உயிர் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு கமாண்டோக்கள் மட்டத்தில் ஜூன் 6, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
இதன் எதிரொலியாக கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவ வீரர்கள் வெளியேறினர். இதை தொடர்ந்து டெப்சாங் மற்றும் பாங்காங் திசோ பகுதியில் இருந்தும் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி வருகிறது. முதலில் பாங்காங் திசோவின் கட்டுப்பாட்டு பகுதி 4ல் இருந்து சீனாவின் படைகள் வாபஸ் வாங்காமல் இருந்தது. ஆனால் இங்கிருந்தும் இன்று காலை சீனா படைகளை வாபஸ் வாங்கியது.இன்னும் ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. அங்கு சீனாவின் படை வீரர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். சீனாவின் நவீன ஆயுதங்கள் இன்னும் அங்கு இருக்கிறது . அதேபோல் சீனாவின் வாகனங்களும் இங்கே இருக்கிறது. ஹாட்ஸ்பிரிங்ஸ் என்பது பாங்காங் திசோ மற்றும் கல்வான் இடையே இருக்கும் பகுதிதான் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகும்.
இந்த நிலையில் இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் தணிந்து இருக்கும் நிலையில் தற்போது இரண்டு நாட்டு ராணுவம் இடையே கமாண்டோக்கள் மட்ட பேச்சுவார்த்தை லடாக்கின் சுஸுல் என்ற இடத்தில் நடக்கிறது. முழுமையாக எல்லையில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கும் வகையில் இன்றைய ஆலோசனை நடைபெறுகிறது. எல்லையில் மே மாதத்திற்கு முந்தைய நிலையை உருவாக்க இந்த கூட்டத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் வலியுறுத்துவார்கள்.