×

பெரம்பலூர் அருகே பரிதாபம் கிணற்றில் விஷவாயு தாக்கி வாலிபர் பலி மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் இறங்கியபோது விஷவாயு தாக்கி வாலிபர் ஒருவரும், அவரை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் இறந்தனர். பெரம்பலூர் அருகே நொச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியம்பாளையத்தில் முருகேசன் என்பவரது வயல் கிணறு புதிதாக வெட்டப்பட்டு வருகிறது. இரூர் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவர் கிணற்றை வெடி வைத்து வெட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வெடி வைத்து தோண்டியும் தண்ணீர் வராததால் நேற்று காலை 11 மணிக்கு கிணற்றில் சைடு போர் போடப்பட்டுள்ளது.

அதன்பின் தண்ணீர் வருகிறதா என நேற்று மதியம் 3 மணியளவில் உள்ளே இறங்கி பார்த்த அப்பகுதியை சேர்ந்த டைலர் (எ) ராதாகிருஷ்ணன் (26) விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற இறங்கிய பாஸ்கர் (26) என்பவரும் விஷவாயு தாக்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். தகவலறிந்து பெரம்பலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் ராஜ்குமார் (34), தனபால் (32), பால்ராஜ்(35) ஆகியோர் சென்று கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினர். ஆனால், அவர்களும் உள்ளேயே மயங்கினர்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு படையினர் ஆக்ஸிஜன் பெட்டிகளுடன் விரைந்து வந்து கிணற்றில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாஸ்கர், தனபால், பால்ராஜ் ஆகியோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வீரர் ராஜ்குமாரை மீட்க முயன்றபோது விஷ வாயுவை தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளேயே மீண்டும் மயங்கி விழுந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரை சடலமாக மீட்டனர். உள்ளேயே இறந்த ராதாகிருஷ்ணன் சடலத்தை மீட்கும் பணி தொடர்கிறது. வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து மீட்புப் பணியை முடுக்கி விட்டனர்.

Tags : Firefighter ,poison gas attack ,Perambalur A , Perambalur, awful, well poisoned, youth killed, firefighter, death
× RELATED தீவுத்திடலில் களைகட்டியது உணவு திருவிழா