×

விகாஸ் துபே என்கவுன்டர் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபே 5 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு மத்தியப்பிரதேசத்தில் சிக்கினான். 8 கொலை உட்பட 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே, விசாரணைக்கு பின்னர் உத்தரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை சுமார் 6 மணியளவில் விகாஸ் துபே இருந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய ரவுடி விகாஸ் துபே, போலீசாரின் துப்பாக்கியை பறித்து தப்ப முயன்றதாகவும், இதனால் அவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாஸ் துபே மீதான என்கவுண்டர் குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இது போலீசாரின் திட்டமிட்ட செயல் என்றும், இதனால் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு அரசியல் ரகசியங்கள் காக்கப்பட்டுள்ளது என அம்மாநில முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அனுப் பிரகாஷ் அவஸ்தி என்பவர் நேற்று பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், “விகாஸ் துபே கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் காவல்துறையினர், கிரிமினல்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. குறிப்பாக பல உண்மைகளை மறைப்பதற்காகத்தான் விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது. இதுபோன்ற செயல் சட்டத்தின் மீதான நம்பிக்கையை குறைப்பதாக இருப்பதால், நீதிமன்றம் இதனை தீவிரமான ஒன்றாக கருதி உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக இந்த சம்பவம் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு வரும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் கூட்டாளி கைது: போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் விகாஸ் துபே உட்பட அவனது கூட்டாளிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தேடப்படும் மற்றொரு கூட்டாளியான அர்விந்த்(என்கிற) ராம்விலாஸ் திவாரி(46) தானே மாவட்டத்தில் நேற்று பிடிபட்டார். அவனுடன் இருந்த அவனது கார் டிரைவர் சுஷில் குமார்(என்கிற) சோனு சுரேஷ் திவாரி(30) என்வனும் கைது செய்யப்பட்டான்.

கடந்த 2001ம் ஆண்டு உ.பி. மாநில பா.ஜ தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சந்தோஷ் சுக்லா கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அர்விந்த் திவாரிக்கு தொடர்பு இருப்பதாக தீவிரவாத தடுப்புப்படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை களமிறங்கியது
ரவுடி விகாஸ் துபே பலரை மிரட்டி சொத்துக்களை அபகரித்துள்ளான். அவனுக்கு உபியில் 11 தனி வீடுகளும், 16 அடுக்குமாடி வீடுகளும் சொந்தமாக உள்ளன. மேலும் பல சொத்துகள் அவன் குடும்பத்தினர் பெயரிலும், 20க்கும் மேற்பட்ட பினாமிகள் பெயரிலும், கூட்டாளிகள் பெயரிலும் உள்ளன. எனவே விகாஸ் அவனது குடும்பத்தினர், கூட்டாளிகள் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை, நிதி மோசடி பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் கிரிமினல் நடவடிக்கைகள் தொடங்க உள்ளன.

Tags : CBI ,Vikas Dubai Encounter ,Supreme Court , Vikas Dubey, Encounter, CBI, Supreme Court
× RELATED கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு...