×

மழைநீரில் தத்தளிக்கும் திருமழிசை தற்காலிக சந்தை கடைகளுக்கு காய்கறிகளை கொண்டு செல்வதில் சிக்கல்

திருவள்ளூர்: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நள்ளிரவு பெய்த மழையில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் காய்கறி மூட்டைகளை கடைக்கு கொண்டு செல்ல முடியாமல் வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோயம்பேடு காய்கறிகள் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து, பூந்தமல்லி அடுத்துள்ள திருமழிசை துணை நகரத்தில் காய்கறி சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. காய்கறி சந்தைக்கான முறையான இடம், சாலை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தையை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் பெய்த கன மழை காரணமாக, காய்கறி சந்தை முழுவதும் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. கடைகள் உள்ளே மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதனால் லாரிகளில் வந்த 5 ஆயிரம் டன் காய்கறிகளை எங்கு இறக்கி விற்பனை செய்வது என்பது தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, சேமிப்பு கிடங்கு இல்லாமல் காய்கறிகள், நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் வீணாக குப்பைக்கு செல்வதாகவும், தற்போது பருவ மழைக் காலம் என்பதால் காய்கறிகளை எப்படி விற்பனை செய்வது என்பது தெரியாமல் திணறி வருவதாகவும், வியாபாரிகள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதேநிலை நீடித்தால் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை விரைவில் மூடுவிழா காண்பது நிச்சயம். எனவே, உடனடியாக மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில், நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த பலத்த மழையால், அனைத்து காய்கறி கடைகளும் நீரில் மூழ்கின. இதனால், கடைகளுக்கு லாரிகளில் வந்த காய்கறிகளை கடை வரை கொண்டுசென்று இறக்கமுடியாமல் வியாபாரிகள் தவித்தனர். சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களும் கால் முட்டியளவு தண்ணீரில் மூட்டைகளை சுமந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனால், நேற்று 50 சதவீத கடைகளை வியாபாரிகள் மூடிவிட்டு சென்றுவிட்டனர்.


Tags : market stalls ,Thirumalisai ,market shops , Rainwater, Massage, Market Stores
× RELATED திருமழிசை பேரூராட்சியில் நேற்று...