×

9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க திட்டம்: தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை வரை அமலில் உள்ளது. மேலும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்றே தெரியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்வி பயிற்றுவிக்கும் நடைமுறைகள், பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்தது.  அப்போது, 2020-2021ம் கல்வி ஆண்டின் தொடக்கம் எப்போது தொடங்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கல்வியாண்டின் குறைந்த நாட்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் சிலவற்றை நீக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதில் 30 சதவீத பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை காரணமாக வீட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் பாடங்களை நடத்தும் திட்டம் 14ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதே நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வீடுவீடாக சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,அதே நாளில் மேற்கண்ட வல்லுநர்குழுவும் தங்கள் பரிந்துரையை முதல்வரிடம் வழங்க உள்ளது. இதற்கிடையே, அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் சென்று சேர்ந்துள்ளன. இவற்றை 13ம் தேதி வினியோகம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளுக்கு சென்று சேர்ந்த பிறகுதான், பாடத்திட்டம் குறைப்பு குறித்த விவரங்கள் வெளியாகும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடங்கள் குறைப்பு எப்படி?
தமிழகத்தில் 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை வகுப்புகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதற்கேற்ப பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளன. இதன்படி 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் தற்போது இரண்டு பாகங்களாக உள்ளன. அவற்றை ஒரு பாகமாக குறைக்க முடிவு செய்துள்ளனர். அதாவது 110 பாட வேளைக்கு பாடங்கள் நடத்தும் அளவுக்கு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த பாடத்திட்டத்தில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 30 சதவீதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலப் பாடங்கள் உள்பட முக்கிய பாடங்களில் உள்ள கடினப்பகுதிகள், விளக்கப்பகுதிகள், பயிற்சிகள், போன்றவை குறைக்கப்பட உள்ளன.

மொழிப்பாடங்களில் இலக்கணப் பகுதிகள், செய்யுள், உரைநடைகளில் தலா 4 பாடப் பகுதிகளில் இருந்தும் கடினப்பகுதிகள் மட்டும் குறைக்கப்படும். ஆங்கிலத்திலும் இலக்கணப்பகுதிகள், துணைப்பாடப் பகுதிகள்,பயிற்சிகள் என 8 பாடப்பகுதிகளில் குறைக்கப்பட உள்ளன. இது தொடர்பான அறிக்கை 14ம் தேதி முதல்வரிடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Nadu , Curriculum, 30 percent reduction plan, Tamil Nadu School Education
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...