புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக தர வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள கணேசன் என்பவர் உள்பட 400 பேரை மீட்கக் கோரியும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மீட்கக் கோரியும், வக்கீல்  ஏ.பி.சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு ஆட்கொணர்வு மனுககளைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டது.

அதேசமயம், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவும் மனுதாரருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், மேற்கு வங்கத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில்  சூரியபிரகாசம் முறையிட்டார். அப்போது அவர், கோவை மாவட்டம் துடியலூரில் புலம் பெயர்ந்த தொழிலாளியின்  கருவுற்றிருந்த மனைவியை மருத்துவமனையில் அனுமதி மறுத்ததால், ஆட்டோவில் பிரசவித்ததாகவும், அப்போது பிறந்த குழந்தை காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரேஷன் அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும், ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கோவை சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. புலம்பெயர்ந்த தொழிலாளி என்பதற்காக அவருக்கு மருத்துவ வசதிகள் மறுக்க முடியாது. அவர்களை கண்டுபிடித்து தேவையான வசதிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>