×

விதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்

வாரணாசி: விதிமுறை மீறி டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்த விவகாரத்தில், கலெக்டரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், உத்தரபிரதேசத்தில் இளம் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் மணியார் நகர் நிர்வாக அதிகாரி (பிசிஎஸ்) மணிமஞ்சரி ராய் (30). இவர், தான் தங்கியிருக்கும் பிளாட்டில் நேற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தகவலறிந்த கோட்வாலி இன்ஸ்பெக்டர் விபின் சிங் தலைமையிலான குழுவினர், மணிமஞ்சரி ராயின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விபின் சிங் கூறுகையில், ‘இறந்த பெண் அதிகாரியின் சகோதரர் விஜயானந்த் ராய் போலீசில் புகார் அளித்தார். அதன் பின்னர் ஐபிசி பிரிவு 306-இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் மணியார் நகர் பஞ்சாயத்து தலைவர் பீம் குப்தா, வரி வசூல் எழுத்தர் வினோத்  சிங், கணினி ஆப்ரேட்டர் அகிலேஷ், நிர்வாக அதிகாரி சிக்கந்தர்பூர் சஞ்சய்  ராவ், ஒரு டிரைவர் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நகர் பஞ்சாயத்து தலைவர் பீம் குப்தா, சில ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பாக விதிமுறை மீறி அனுமதி வழங்க நிர்வாக அதிகாரி மணிமஞ்சரி ராய்க்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இறந்த மணிமஞ்சரி ராய் தனது தற்கொலை குறிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார். சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான அபிவிருத்தி பணிகளுக்காக டெண்டர்கள் விடுவதில், விதிமுறைகளை தளர்த்தி அனுமதி வழங்க தொடர்ந்து மணிமஞ்சரி ராய்க்கு நெருக்கடி கொடுத்தது மட்டுமின்றி மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலும், 35 திட்டங்களுக்கு டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவற்றை நிறைவேற்ற உத்தரவுகளை பிறப்பிக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஹரி பிரதாப் ஷாஹியிடம் மணிமஞ்சரி ராய் புகார் அளித்தபோது, அவர் தலைவர் பீம் ​​ராவுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர் விருப்பப்படி ஒப்பந்தம் வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் வேறு வழியின்றி நகர் பஞ்சாயத்து தலைவரும் அவரது கூட்டாளிகளும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், மணிமஞ்சரி ராய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவைெயல்லாம் அவரது தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அவரது பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மணிமஞ்சரி ராய், நகர நிர்வாக அதிகாரியாக 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Collector ,tragedy ,officer , UP, teenaged officer, abducted and committed suicide
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...