×

இஞ்சி, எலுமிச்சை கலந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆவின் மோர் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம்

சென்னை: ஆவின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள்  கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகிய ஐந்து புதிய பொருட்களை முதல்வர் எடப்பாடி அறிமுகம் செய்து வைத்தார். ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மேலும் வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், 5 புதிய பொருட்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி, தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று கால கட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பொருட்களை சேர்த்து புதிய ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படும். சாக்லெட் சுவை மிகுந்த சாக்கோ லெஸ்ஸி மற்றும் மாம்பழச் சுவையுடன் கூடிய மேங்கோ லெஸ்ஸி என்ற இரண்டு புதிய லெஸ்ஸிகளை 200 மில்லி லிட்டர் பாட்டிலில் 23 ரூபாய் என்ற விலையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

நுகர்வோர்களின் குறிப்பாக வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட நாட்கள் கெடாத வகையில் ஆவின் பால் அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு, பேக்குகளில் அடைக்கப்பட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக கொழுப்பு சத்துக்கொண்ட டீ மேட் என்ற புதிய பால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Introducing Ginger, Lemon, Immunity, Avien Whey, 5 new ingredients
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...