×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்எஸ்ஐ உள்பட மேலும் 5 போலீசார் கைது: சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்எஸ்ஐ உள்பட மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிஐ எஸ்பி தன்மயா பெகரா வழக்கு பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொரோனா ஊரடங்கு நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் இறப்புக்கு போலீசாரும், பிரண்ட்ஸ் ஆப் போலீசாரும் போலீஸ் நிலையத்தில் வைத்து விடிய, விடிய லத்தியால் தாக்கியதே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் இதுகுறித்து கண்டன குரல் எழுந்தது. இதற்கு ஆதாரமாக சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் தலைமைக் காவலர் ரேவதி, மாஜிஸ்திரேட் முன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மதுரை உயர் நீதிமன்ற கிளை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீசார் முத்துராஜ், முருகன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 4ம் தேதி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்தவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 35 போலீசாரில் 26 பேர் சம்பவத்தன்று பணியில் இருந்துள்ளனர்.

இவர்களில் பெண் காவலர் ரேவதியை தவிர மீதியுள்ள 25 பேரில் 10 போலீசாரையும், 4 பிரண்ட்ஸ் ஆப் போலீசாரையும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள்  என்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்எஸ்ஐ பால்துரை, காவலர்கள் செல்லதுரை, சாமிதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் பலர் சிக்குவார்கள் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிபிஐ வழக்குப்பதிவு: இதனிடையே சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து சிபிஐ எஸ்பி தன்மயா பெகரா நேற்று முன்தினம் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார். ஜூலை 2ம் தேதி பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ‘சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல்’ ஆகிய சம்பவங்கள் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடம் சாத்தான்குளம் போலீஸ் நிலையம் எனவும், இதுகுறித்து கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளர் சங்கர், ேகாவில்பட்டி போலீசில் புகார் அளித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விஜய் குமார் சுக்லா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கிற்கான எதிரிகள், ‘தெரியாத நபர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

* எஸ்எஸ்ஐயை பார்க்க காத்திருந்த குடும்பத்தினர்
தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்எஸ்ஐ பால்துரையிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் அவரது மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் அவரை பார்ப்பதற்காக வந்து காத்திருந்தனர். அவர்களை பார்த்து பேச சிபிசிஐடி போலீசார் அனுமதித்தனர். அவர்கள் எஸ்ஐ பால்துரையை சந்தித்து பேசி திரும்பினர்.

Tags : policemen ,CBI ,murder ,SSI ,Sathankulam , Sathankulam, father, son murder case, SSI, 5 cops arrested, CBI registered, investigation
× RELATED புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு...