×

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பான நடைமுறைகள் என்ன?: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பான நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் டி.பி.சத்திரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவரின் உடலை புதைக்க வந்தவர்களை கல், கட்டையால் சிலர் தாக்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கி, ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர் உடல் அடக்கத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் \நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் இன்று விசாரித்தனர். அப்போது, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகள் என்ன என்பதை அரிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.



Tags : coroner ,burial , Doctor Simon, High Court, Government of Tamil Nadu, Corona, ICMR
× RELATED வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க...