×

தனியார் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பெண் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 1000 பேரை திடீரென பணி நீக்கம் செய்ததால் கொந்தளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தனியார் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில், திடீரென 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததால், பெண் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அருகே பரனூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடைகள் தயாரித்து ஏற்றமதி செய்யும் தனியார்  நிறுவனம் செயல்படுகிறது. இங்கு ஒப்பந்தம் மற்றும் நிரந்தரமாக 1000க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 90 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்நிறுவனம் சரிவர இயங்காவில்லை. இதனால், அந்த நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், அரசு ஒரு சில தளர்வுகளோடு தனியார் கம்பெனிகள் இயங்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சுமார் 104 நாட்களுக்கு பிறகு மீண்டும் பணியாளர்கள் வழக்கம்போல பணிக்கு வந்தனர். அப்போது, நிறுவனத்தை  மூடப்போவதாகவும். இனி வேலை இல்லை என எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், நேற்று காலை மீண்டும் கம்பெனிக்கு வந்தனர். அங்கு காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, தங்களை திடீரென வேலையில் இருந்து நீக்க கூடாது. வழக்கம்போல் வேலை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறினர். இதையடுத்து போலீசார், நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : garment export firm struggle ,garment export firm , Private Clothing, Export Company, Female Workers, Situation Struggle, 1000 People, Sack
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ