×

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கு.: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11  எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரிக்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ம் தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

பின்னர் தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இதுகுறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : disqualification ,Supreme Court Hearing Tomorrow , Case ,disqualification, 11 MLAs,, OPS, Supreme Court, hearing tomorrow
× RELATED உலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்