×

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசின் தடையை மீறி இறக்கப்படும் வளமீன்கள்: அதிகாரிகளை கண்டதும் படகுடன் ஓட்டம்

புதுக்கடை: தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மூலம் தூத்தூர், இனயம் ஆகிய  மண்டலங்களை சேர்ந்த சுமார் 710 விசைப்படகுகளிலும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான பைபர் நாட்டுப் படகுகளிலும்  மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் பல்லாயிரக் கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த துறைமுகம் மூலம் மாதம் தோறும் சுமார் ரூ.50 கோடி வரை அரசுக்கு வருமானம் வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் இந்த துறைமுகத்தில் மீன் பிடிக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் ஒரு சிலரது துணையுடன் அதிக அளவில் கேரள விசை படகுகள் துறைமுகத்திற்கு வருவதாக புகார்கள் உள்ளது.குறிப்பாக அரசால் தடை செய்ப்பட்ட குஞ்சு மீன்கள் (வள மீன்கள்) கேரள படகுகள்  மூலம்  அதிக  அளவில் இங்கு இறக்கப்படுகிறது. கடலில் மீன் பிடிக்கும் போது வலையில் வருகின்ற குஞ்சு மீன்களை கடலில் வீசி விட வேண்டும் என்பது விதி முறை. அப்போது தான் பிற மீன்களுக்கு அது உணவாகும். கேரள விசை படகுகள் இந்த மீன்களை கடலில் கொட்டாமல் பல நாளாக சேகரித்து வைக்கின்றனர். பின்னர் அதை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து, இங்கிருந்து சட்டத்திற்கு புறம்பாக லாரிகளில் ஏற்றி விற்பனை செய்கின்றனர். இதற்கு அந்த பகுதியை  சேர்ந்த சிலர், அதிகாரிகள் உதவியுடன் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். இந்த வள மீன்களை கொண்டு வரும்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் துர் நாற்றம் ஏற்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பொது மக்கள் சார்பில் பல புகார்கள் கொடுக்கப்பட்டு  உள்ளன. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய அதிகாரிகள், காவல் துறையினர் கண்டுகொள்ளாததால் வள மீன் பிரச்னை தேங்காப்பட்டணத்தில் மட்டும் கோடிகளை குவிக்கும் தொழிலாக மாறிவிட்டது. வள மீன்கள் கேரளாவிலோ,  குமரிமாவட்டத்தில் உள்ள பிற மீன்பிடி துறை  முகங்களிலோ இறக்கப் படுவதில்லை. குமரி மாவட்டத்தின் பிற துறைமுகங்களில் கேரள படகுகள் செல்ல அனுமதிப்பதும் இல்லை. ஆனால் தேங்காப்பட்டணத்தில் மட்டும் இந்த சம்பவம் தொடர்வது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கேள்வி குறிகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி இரவு தேங்காப்பட்டணம் அருகே உள்ள பராக்கானி தனியார் துறைமுகத்தில் வளமீன்கள் இறங்கியதாக புகார் எழுந்தது. மீண்டும் நேற்று காலையில் தடை செய்யப்பட்ட வளமீன்களுடன் படகு ஓன்று தேங்காப்பட்டணம் வந்துள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் வருவதை அறிந்த விசைப்படகு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. அதேவேளை படகில் உள்ள வள மீன்களை ஏற்றி செல்ல வந்த வாகனத்தைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டிரைவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் குறிப்பிட்ட சிலரால் சட்டத்துக்கு  புறம்பாக நடத்தப்படும் இந்த வள மீன் கடத்தலை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. …

The post தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசின் தடையை மீறி இறக்கப்படும் வளமீன்கள்: அதிகாரிகளை கண்டதும் படகுடன் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tengapatnam ,Pudukadai ,Thoothoor ,Inayam ,
× RELATED புதுக்கடை அருகே மீனவர் திடீர் சாவு