திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1359 கிராமங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முதற்கட்டமாக 467 கிராமங்களில் விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி அறிவுரையின்படி, எனது மேற்பார்வையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு போலீஸ் தலைமையில் அரசு ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1359 கிராமங்கள் உள்ளது. இதில், 467 கிராமங்களில் கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை கொண்டு வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் உள்ளவர்களை கண்டறியவும், வெளியூர் மற்றும் வெளி மாநில நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கவும், தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில், கிராம விழிப்புணர்வு குழுவினருக்கு, முககவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவை மாவட்ட போலீசாரால் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.