×

குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு நவம்பர் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வருகிற 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மாதமும் (ஜூலை) குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது 1.7.20 முதல் 3.7.20 வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாய விலை கடைகளில் அதற்கான விலை கொடுத்து பெற்றுள்ளனர். அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்த தொகை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடுசெய்து கொள்ளப்படும். இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும்.

மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள், இந்த மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலை கடைகளில் மீண்டும் சென்று இந்த மாதமே பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : family cardholders ,Govt , Family card holder, per person, till November, 5kg rice, free, Govt
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...