×

கீழடி அகழாய்வை தொடர்ந்து அகரத்தில் மண்பானைகள் அதிகளவு கண்டெடுப்பு

திருப்புவனம்,: கீழடியை தொடர்ந்து அகரம் அகழாய்வில் மண் பானைகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்டமாகவும், அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகளும் நடந்து வருகின்றன. அகரம் கிராமத்தில் கோட்டைமேடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 6 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் தங்க நாணயம், நத்தை ஓடுகள் உள்ளிட்டவைகள் ஏராளமான அளவில் கிடைத்து வரும் நிலையில், அனைத்து குழிகளிலும் மண் பானைகள், பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.

பானைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும், வெவ்வேறு நிறத்திலும், சிறிதும் பெரிதுமான அளவுகளிலும் கிடைத்துள்ளது. ஒரு குழியில் கிடைக்கும் மண்பானைக்கும், அடுத்த குழியில் கிடைக்கும் பானைகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அகரத்தில் வாய் குறுகலாக உள்ள பானைகளும், தண்ணீர் குவளை போன்ற பானைகளும் கண்டறியப்பட்டன.அகரத்தில் ஒரே குழியில் அடுத்தடுத்து பானைகள் கிடைத்துள்ளன. மூன்று பானைகளுக்கும் பெருமளவு வித்தியாசம் உள்ளது. அகரத்தில் கிடைத்து வரும் பானைகள், பானை ஓடுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்விற்காக அனுப்பட்டு வருகின்றன. பண்டைய காலத்தில் அன்னசத்திரங்கள் அதிகளவில் செயல்பட்டு உள்ளன.

எனவே, ஒரே இடத்தில் சமையல் செய்வது போன்றவைகளும் இருந்திருக்கலாம், செல்வந்தர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சமையலுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அகழாய்வின் அடிப்படையில், கீழடி தொழில் நகரமாகவும், கொந்தகை மயானமாகவும், அகரம் சமையல் கூடமாகவும், செயல்பட்டிருக்க வாய்ப்புண்டு என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அகரத்தில் இதுவரை செங்கல் கட்டுமானம் எதுவும் வெளிப்படவில்லை. மண்பானைகள், ஒடுகள், நத்தை ஓடுகளுமே அதிகளவில் வெளிப்பட்டுள்ளன. பானைகள் அனைத்தும் சேமிப்பிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அகரத்தில் உள்ள மண் துகள்கள் அனைத்தும் சாம்பல் நிறத்தில் உள்ளதும், இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது.

Tags : Akarat , Underground excavation, earthenware
× RELATED அகரம் அகழாய்வில் நுண்கருவிகள் கண்டெடுப்பு