×

போலீசின் வசூல் ஏஜெண்டாகும் நண்பர்கள் குழு: அடாவடி, அத்துமீறலுக்கு துணைபோகும் அவலம்..!!

சென்னை: போலீசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டிய நண்பர்கள் குழுவினர் வசூல் ஏஜெண்டாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறையின் அத்துமீறலுக்கும், அடாவடிக்கும் துணைபோகும் போலீஸ் நண்பர்கள் குழுவை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. காவல்துறையினருக்கு உதவியாக 1991-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது தான் போலீஸ் நண்பர்கள் குழு. அப்போது ராமநாதபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் பிலிப், போலீஸ் நண்பர்கள் குழுவை முதல்முதலில் ஏற்படுத்தினார்.

போலீசுக்கும், பொதுமக்களுக்கு நல்லுறவை ஏற்படுத்தும் இணைப்பு பாலமாக இருப்பதே இதன் நோக்கம். பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் நண்பர்கள் குழுவில் விரும்பி இணைந்தனர். பின்னர் மற்ற இடங்களுக்கும் இக்குழு விரிவடைந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்களில் போலீசுடன் இணைந்து ரோந்து செல்வது போன்ற பணிகள் தரப்பட்டன. நாளடைவில் நண்பர்கள் குழு உறுப்பினர்களை போலீசார் தங்கள் வசூல் ஏஜெண்டாக மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காவல்துறையின் அத்துமீறல், அடாவடி தனத்துக்கும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் துணை போகினர். அதன் உச்சமே சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தந்தை, மகன் கொலைக்கு துணை போன போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினர்களையும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நண்பர்கள் குழு உள்ளது. ஒவ்வொன்றிலும் தலா 20 பேர் வரை உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு என 34 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு சோதனை சாவடிகளிலும் கூட, இவர்களை தான் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தியுள்ளனர். நடுநிலைக்கு மாறான போக்கை, போலீஸ் நண்பர்கள் குழு பின்பற்றுவதால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆட்டுக்கு தாடி எப்படி அவசியம் இல்லையோ, அதேபோன்று காவல்துறைக்கு போலீஸ் நண்பர்கள் குழு தேவையற்ற ஒன்றாகிவிட்டதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Tags : friends ,group ,collection agent ,Police collections agent ,Awwadi , Police collections agent is a group of friends: Awwadi, aiding and abetting violation .. !!
× RELATED நண்பர்களுடன் மது விருந்து 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி