×

திருமணி - மோசிவாக்கம் சாலையில் 5 கோடியில் கட்டப்பட்டு திடீர் மழையால் சுரங்கப்பாதை சுவர் இடிந்து விழுந்தது

* திறப்பு விழாவுக்கு முன்பே விபத்து
* தரமான கட்டுமான பணி இல்லை என புகார்

செங்கல்பட்டு: 5 கோடியில் கட்டி முடித்து, திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த ரயில்வே சுரங்கம், நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால், சரிந்து விழுந்தது. இதனை, தரமான கட்டுமான செய்யாததால், விழுந்ததாக ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர். செங்கல்பட்டு அடுத்த திருமணி - மோசிவாக்கம் சாலையில், மோசிவாக்கம் அருகே ரயில்வே கேட் உள்ளது இந்த ரயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்தனர். இதனால், இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ₹5 கோடி.செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி, சமீபத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து, திறப்பு விழா நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்குள், கொரோனா பரவலால், நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், புதிதாக கட்டப்பட்ட சுரங்கபாதையின் கான்கிரீட் சுவர் மீது மண் சரிந்து, சுரங்கபாதை சுவர் இடிந்து விழுந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு ரயில் நிலைய பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பார்வையிட்டு உடைந்த கான்கிரீட்  மற்றும்சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றினர். இதுபற்றி ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், கட்டுமான பணி தரமாக இல்லாததால், திறப்பு விழாவுக்கு முன்னதாகவே சுவர் இடிந்து விழுந்தது. தண்டவாளத்துக்கு 8 அடிக்கு அருகில் சுவர் உடைந்துள்ளது. தண்டவாளத்தின் கீழ்பகுதியில் உடைந்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறக்கும் முன்பே இடிந்துள்ளது. 50 ஆண்டுகள் தரமாக இருக்கவேண்டிய சுரங்கப்பாதை வாகனங்கள் செல்வதற்கு முன்பே இடிந்துள்ளது. இப்படி இருந்தால் எப்படி இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவது. உயர் அதிகாரிகள் கமிஷன் பெற்று கொண்டு கட்டுமான பணியை கவனிக்காமல் விட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : road ,Thiruni-Mosikavam ,Thiruni-Mozikawam , Thirumani, Mossivakam, subway wall
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி