பதவி உயர்வின்போது மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கணக்கிட ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  பதவி உயர்வின்போது மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கணக்கிட  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றுபவர் வேதநாயகி. இவரது பெயரை கடந்தாண்டு வெளியான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்க்கவில்லை. மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணி புரியவில்லை எனக்கூறி பட்டியலில் பெயர் சேர்க்க மறுத்து விட்டனர். இந்த பட்டியலை ரத்து செய்து தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி, வேதநாயகி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இவரைப்போல் மேலும் சில பெண் அரசு ஊழியர்கள் மனு செய்திருந்தனர்.

 இந்த மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஸ்வலிங்கம் ஆஜராகி, ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் பிரிவு 12ல் விடுமுறை பதவி உயர்வுக்கு தடையாக இல்லை என கூறப்பட்டுள்ளது. இதை பல வழக்குகளில் ஐகோர்ட்டும் உறுதி செய்துள்ளது. ஆனாலும் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘பணிக்காலத்தின்போதுதான் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். எனவே, இதையும் பணிக்காலமாகத் தான் கணக்கிட வேண்டும். இதன்படி, மனுதாரர்களை ஜூலை 31க்குள் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>