×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 382 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 381 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்க கடந்த 2019ல் தமிழக அரசு ஒப்புதல் பெற்றது. அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 8.328 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்த மருத்துவ கல்லூரியை நிறுவ 381.76 கோடி அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பாக ₹195 கோடியும், தமிழ்நாடு அரசு 40 சதவீத பங்களிப்பாக 186.76 கோடியும் வழங்கும். முதல்கட்டமாக தமிழ்நாடு அரசால் 110 கோடியும், மத்திய அரசால் 50 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் 132.50 கோடி மதிப்பீட்டிலும், மருத்துவமனை கட்டிடங்கள் 182.79 கோடி மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதி கட்டிடங்கள் போன்றவை 66.47 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி 150 எம்.பி.பி.எஸ்.  இடங்களுடன் நிறுவப்படும்.மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம் நெட்டூரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி, தர்மபுரி மாவட்டம் பேளாரஅள்ளி, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு மற்றும் கதிராமங்கலம், தேனி மாவட்டம் பு.

தர்மத்துப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் மேலதேவநல்லூர், திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் 7.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Government Medical College ,Kallakurichi District Kallakurichi District ,New Government Medical College , Kallakurichi District, Government Medical College, Edappadi Palanisamy
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...