×

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் கடந்த மாதம் 10ம் தேதி உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த மாதம் 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று  இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. இதை அமைச்சர் மறுத்தார். அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கடந்த 2 நாட்களுக்கு முன் மியாட் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி அரசு, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் மற்றும் அவருடைய மனைவி மகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூவரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைப்போன்று உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள்  எம்எல்ஏ கண்ணன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பல அமைச்சர்களின் உதவியாளர்கள், டிரைவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்துடன் சென்னை கீரீன்வேஸ் சாலையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவருடைய மனைவி ஜெயந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ அதே பகுதியில் தங்கியிருந்து மனைவியை கவனித்து வருவதாக  கூறப்படுகிறது.


Tags : Selur Raju ,hospital , Minister Selur Raju, Wife, Corona, Private Hospital
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...