×

ரஷ்யாவில் தவித்த பொறியியல், மருத்துவ மாணவர்கள் 144 பேர் சென்னை திரும்பினர்

சென்னை:ரஷ்யாவில் தவித்த 144  மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு  இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். ரஷ்யாவில் கொரோனாவால் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மருத்துவம் மற்றும் பொறியியல் மேல் படிப்பு படிப்பதற்காக இந்தியாவில் இருந்து சென்ற மாணவ, மாணவிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் அவதிப்பட்டு வந்தனர். உணவு, இருப்பிடமின்றி தவித்தனர். அவர்கள் ‘வந்தே பாரத்’ மூலமாக இந்தியா திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் ஏற்பாடு செய்தது. மேலும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் கிருமி நாசினி, முகக்கவசம், ஸ்னாக்ஸ் உள்ளிட்ட தொகுப்பு பையை கொடுத்து அவர்களை வழியனுப்பியது.

அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி உற்சாகமாக போஸ் கொடுத்தனர். அதன்பிறகு ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம்  நேற்று காலை 6.30 மணிக்கு 144 இந்தியர்களுடன் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரிலிருந்து  சென்னை வந்தது.  அவர்களில் ஆண்கள் 99, பெண்கள் 45. அனைவருமே ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி கற்கும்  மாணவ, மாணவிகள். இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை, சுங்கச்சோதனை உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 35 பேர் இலவச தங்குமிடங்களான விஐடிக்கும், 109  பேர் கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான தனியார் ஓட்டல்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.  

இதுபோல, இலங்கையிலிருந்து 90 இந்தியர்களுடன் தனியார் சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அவர்களில் 75 ஆண்கள், 15 பெண்கள். அனைவரும் அங்குள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். அவர்களை அந்த நிறுவனவே மத்தியஅரசிடம் சிறப்பு அனுமதி பெற்று சிறப்பு தனி விமானத்தில் இந்தியா அழைத்துவந்தது. அவர்கள் தனியார் நிறுவனம் மூலம் வந்ததால் இலவச மருத்துவ பரிசோதனை, இலவச தங்குமிடங்கள் வசதி செய்யவில்லை. இதையடுத்து 90 பேரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர ஓட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Tags : Russia ,Chennai. 144 ,Chennai , Russia, Engineering, Medical Students, Madras
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...