×

நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கிறது மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா: சென்னையில் படிப்படியாக குறைகிறது

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 4,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 2,438 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையை விட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் சென்னையில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1033 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையை விட மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, சென்னையில் முன்பு எவ்வாறு கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்து வந்தனரோ அதே போன்று பிற மாவட்டங்களிலும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக மற்ற மாவட்டத்தை காட்டிலும் மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 1ம் தேதி தமிழகத்தில் 3,882 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், சென்னையில் அதிகபட்சமாக 2,182 பேருக்கும், பிற மாவட்டங்களில் 1,700 பேருக்கும் தொற்று உறுதியானது. இதற்கு பிறகுதான், சென்னையை காட்டிலும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி ஜூலை 2ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சபட்சமாக 4,343 பேர். அதில், சென்னையில் 2,027 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 2,316 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 3ம் தேதி 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் 2,082 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 2,247 பேரும் பாதிக்கப்பட்டனர். நேற்று 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் சென்னையில் 1,842 பேருக்கும், பிற மாவட்டங்களில் உச்சபட்சமாக 2,438 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கிவிட்டது.. நேற்று மட்டும் மாவட்டங்களை விட சென்னையில் 596 பேருக்கு பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், சென்னையில் நேற்று முன்தினம் பாதிப்பை விட நேற்று 240 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 36,164 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4,280 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை 1,07,001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,588 பேர் ஆண்கள், 1,692 பேர் பெண்கள். தற்போது வரை 65,604 ஆண்கள், 41,375 பெண்கள், 22 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 2,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 44,956 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று மட்டும் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 47 பேருமாக 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 37 பேர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 28 பேர். அதன்படி தமிழகத்தில் இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 1033 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் இதுவரை 1,450 பேர் ெகாரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் 417 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : Chennai ,districts , istricts, Corona, Madras
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்...