×

காக்கிசட்டைக்குள் புகுந்த கொரோனா மன அழுத்தத்தில் தவிக்கும் போலீசார்

* குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாமல் ஏக்கம்
* மாற்றுவழி சொல்லும் மனநல ஆலோசகர்கள்

சேலம்: எந்த நேரம் அழைத்தாலும் பணிக்கு ஓடிவரவேண்டும் என்ற உறுதி மொழியுடன் காக்கிச்சட்டைக்குள் நுழைபவர்கள் போலீசார். தற்போது ஒட்டுமொத்த காக்கி சட்டையையும் மனஉளைச்சல் மட்டுமல்லாமல்,மரண பீதிக்கும் ஆளாக்கி இருப்பது சென்னை இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் மரணம். ஆமாம்... கொரோனா என்ற கொடிய நோய்க்கு ஆளாகி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.அவரது உடலை பார்க்க முடியாமல் மனைவி மற்றும் பெண் குழந்தைகள் கதறி அழுத காட்சி போலீசார் மட்டுமின்றி,பொதுமக்கள் மனதையும் உலுக்கியது.அதன்பிறகே போலீசாருக்கு கொரோனா பற்றிய கொடூரம் தெரியவந்தது. தமிழக காவல்துறையில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.ஊரடங்கு அமலில் இருந்தாலும் போலீஸ் ஸ்டேசன் வரும் பொதுமக்களின் பிரச்னையை கேட்டு அதற்கான தீர்வை வழங்குகிறார்கள். நம்மை வீட்டிற்குள் வைத்து விட்டு நடுரோட்டில் பாதுகாப்பாக நிற்கிறார்கள் இவர்கள்.

குற்றவாளிகளை பிடித்து வரும்போது,அவர்களுக்கும் கொரோனா இருக்கும் பட்சத்தில் போலீசாரும் பாதிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் குற்றவாளியையும் பிடிக்காமல் விட்டுவிட முடியாது.  இதன்காரணமாக ஐபிஎஸ் அதிகாரி முதல் ஏட்டு வரையில் கொரோனா பரவியுள்ளது. இதனால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, அம்மா என்று ஓடிவரும் குழந்தைகளை தூக்க முடியாத நிலைஏற்படுகிறது. அவர்களுடன் தூங்குதவற்கு கூட முடிவதில்லை.அவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நீண்ட விடுப்பு கொடுத்தாலும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க ஏராளமான போலீசார் தயாராக இருக்கிறார்கள்.விடுப்பு கேட்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தான் 55 வயதிற்கு மேற்பட்ட போலீசாருக்கு ஓய்வு கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.மனஅழுத்தத்தின் காரணமாக தவிக்கும் போலீசாரை அதிலிருந்து எவ்வாறு மீட்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இது குறித்து மனநல ஆலோசகர்கள் கூறும்போது,எத்தனையோ துறைகள் இருந்தாலும் காவல்துறைக்கு எதுவும் ஈடாகாது.24 மணி நேரமும் அவர்களின் பணி பொது மக்களுக்கு தேவை.அவர்களின் பாதுகாப்பில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.எனவே வேலைக்கு செல்லும் போலீசார் தினமும் 2 மணி நேரத்தை தங்களுக்கென ஒதுக்க வேண்டும்.யோகா செய்யலாம்,ஆன்மீக புத்தகம் படிக்கலாம். கதை, கவிதை எழுதலாம்.அவர்களுக்கு என்னென்ன பிடிக்குமோ அதனை அவர்கள் மனமுவந்து செய்ய வேண்டும்.ஆனால் கண்டிப்பாக கிரைம் நாவல் படிக்கவே கூடாது.இவ்வாறு அவர்கள் மனதை வேறுதிசைக்கு மாற்றும்போது,மனஅழுத்ததில் இருந்து விடுபடலாம்.இதையும் தாண்டி,போலீஸ் உயர்அதிகாரிகள் அவர்களை கடிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.இக்கட்டான கொரோனா காலத்தில் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாது என்றனர். இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில்,‘‘இந்த இக்கட்டான காலகட்டத்தில் காவலர்களை பாதுகாப்பது எங்களின் கடமை.அவர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சி கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் இதற்கான திட்டம் தயாரித்து வருகின்றனர்.விரைவில் நடைமுறைக்கு வரஇருக்கிறது,’’என்றார்.

பற்றாக்குறையும் முக்கிய காரணம்
தமிழக காவல்துறையில் பணிகள் அதிகம் இருந்தாலும் போலீஸ் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டேதான் இருக்கிறது.தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் பணியிடங்கள் காவல்துறையில் காலியாக இருந்து வருகிறது.ஓய்வில்லாமல் தொடர்ந்து பணி வழங்குவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

55வயது கடந்த 300 போலீசார்
சேலம் மாநகர காவல்துறையில் 1,700 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சிறப்பு எஸ்.எஸ்.ஐக்கள் உள்பட 300 பேர்,55 வயதை தொட்டவர்கள்.இவர்களுக்கு லீவு கொடுக்கும் பட்சத்தில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது.இதையடுத்து அவர்களுக்கு லேசான பணி வழங்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 20 ஆயிரம் பெண் போலீசார் உள்பட 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
* 1973ம்ஆண்டு காவல்துறையில் பெண் போலீசாரும்,சப்இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.
*2004ம் ஆண்டு பெண்கள் கொண்ட தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் அமைக்கப்பட்டது.

Tags : Corona , Corona stormed ,casket, depressed cops
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...