×

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3வது நாளாக ரெம்டெசிவிர் வாங்க வௌியூர்வாசிகள் குவிந்தனர்: 2 நாள் காத்திருந்து வாங்கி சென்றனர்

* வெளியூர்களில் சிகிச்சை பெறுவோர் சென்னையில் உள்ள தங்களது நண்பர்கள், உறவினர்கள் வாயிலாக மருந்துகளை பெற்றனர்.சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க 3வது நாளாக மக்கள் குவிந்தனர். சிலர் 2 நாட்களாக காத்திருந்து வாங்கிச் சென்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகளாக டாக்டர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிச்சந்தையில், பல ஆயிரம் ரூபாய்க்கு, மருந்துகள் பேரம்பேசி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மருந்துகள் கிடைக்காமல், தெரு, தெருவாக பொதுமக்கள் அலைந்தனர். இவற்றை தடுக்கும் வகையில், தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ‘உயிர்காக்கும் மருந்தகம்’ துவங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில், ஒரு ரெம்டெசிவிர் பாக்ஸ் 1,580 விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு நபருக்கு 6 பாக்ஸ் வழங்கப்படும். இதற்கு, நோயாளிக்கு டாக்டர் வழங்கிய பரிந்துரைசீட்டு, ஆதார் அட்டை, சி.டி.ஸ்கேன் ஆகிய நகல்களை கொடுத்து பெற்று கொள்ளலாம். இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து வாங்க நோயாளிகளின் உறவினர்கள் திருச்சி, மதுரை, கோவை, சேலம், தேனி,  கள்ளக்குறிச்சி, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை வந்திருந்தனர். அவர்களில் பலர் 2 நாட்களாக சென்னையில் தங்கி மருந்துகளை வாங்கிச் சென்றனர். மேலும், சிலர் வெளியூர்களில் சிகிச்சை பெறுவோர் சென்னையில் உள்ள தங்களது நண்பர்கள், உறவினர்கள் வாயிலாக மருந்துகளை பெற்றனர். மேலும், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் கவுண்டர்களில் ரெம்டெசிவிர் வழங்கப்படுவதால் மற்ற மருந்துகளை நோயாளிகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மருந்துகள் வழங்கப்படுவதால் சிலர் காலையில் இருந்து காத்திக்கிடந்து மருந்துகள் வாங்காமலும் திரும்பி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இதுபோன்ற மருந்தகத்தை திருச்சி, மதுரை, கோவை, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். கூடுதல் கவுண்டர்கள் மற்றும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கண்ட மருத்து குறித்து விவரங்களை அறிந்துகொள்ள தொலைபேசி எண் 104 என்ற எண்ணை அழைக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவசேவைகள் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்….

The post கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3வது நாளாக ரெம்டெசிவிர் வாங்க வௌியூர்வாசிகள் குவிந்தனர்: 2 நாள் காத்திருந்து வாங்கி சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Killpakkam Government Hospital ,Chennai ,Kilpakkam Government Hospital ,Vauyuur ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!