×

சேரன்மகாதேவியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்: நெடுஞ்சாலையும் சிதிலமடைகிறது

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் பணகுடி, வடக்கு விஜயநாராயணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் சில இடங்களில் சாலையோரமும், பல இடங்களில் சாலை பகுதி வழியாகவும் செல்கிறது. சேரன்மகாதேவி-டவுன் மெயின்ரோட்டில் சாலையோரம் இடமில்லாததால் சாலையின் நடுவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் சேரன்மகாதேவி பழைய இந்தியன் வங்கி பஸ்நிறுத்தம் அருகே குழாயில் விரிசல் ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் தொலைபேசி மூலம் பணகுடி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. தற்போது குழாயில் விரிசல் அதிகமாகி கூடுதல் அளவு தண்ணீர் வீணாவதுடன் சாலையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபோல் காந்தி பார்க் பஸ்நிறுத்தம் அருகிலும் பல மாதங்களாக சாலையில் குடிநீர் வீணாவதால் அப்பகுதியிலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் சேரன்மகாதேவி-களக்காடு ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட வெள்ளநீர் கால்வாய் கீழ்புறமும் குழாயில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்யுமாறு வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cheranamagadevi ,Drinking Water ,Officers of Negligence , Cheranmagadevi, Drinking Water, Highway
× RELATED மது குடிக்க தண்ணீர் கேட்டு தகராறு முதியவர் கொலை: ஆசாமிக்கு வலை