×

பரமக்குடி, உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: பரமக்குடி, உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர். இவருடன் கொரோனா நிவாரணப் பணியில் ஈடுபட்ட, இளைஞர் ஒருவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் எம்எல்ஏ சதன் பிரபாகர், அவருடைய மகன் உள்பட அதிமுகவை சேர்ந்த 10 பேர் கடந்த 30ம் தேதி பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவு நேற்று வெளியானது. இதில் எம்எல்ஏ சதன் பிரபாகர், அவரது மகன், உதவியாளர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.இதைத் தொடர்ந்து, மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும்  மூடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார். நேற்று காலை எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உதவியாளர்கள், கார் டிரைவர், மனைவி, மகன், வீட்டில் வேலை செய்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

Tags : Corona ,AIADMK ,Ulundurpet , Corona confirmed , Paramkudi, Ulundurpet, AIADMK MLAs
× RELATED வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி