×

அதிகாரிகள், அமைச்சர் பாராமுகத்தால் ஆர்.கே.நகரில் அதிகரிக்கும் கொரோனா: அடிக்கடி மீட்டிங், மீடியா பேட்டிக்கு மட்டுமே முக்கியத்துவம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நோய் தொற்று எண்ணிக்கை 1200ஆகி இருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக தினசரி 90க்கும் மேற்பட்டோர் வரை பாதிக்கப்பட்டு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் குனமடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த மாதம் வரை 50க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டன. இது தற்போது 100ஆக உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும், நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கடந்த 2 மாதமாக சுகாதார அதிகாரி இல்லை. இதனிடையே, பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் ஆர்.கே.நகர் தொகுதியில் கொரோனா தொற்றை தடுக்க முறையான நடவடிக்கை இல்லாமல், பெயரளவுக்கு பணி நடந்து வருகிறது. இந்த மண்டலத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் மண்டல அதிகாரி நியமிக்கப்பட்டார். பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாமல், எப்போதும் மீட்டிங் மட்டுமே நடத்துகிறார்கள்.

நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அமைச்சரோ ஆய்வு மட்டுமே நடத்தி வருகிறார். மீடியாக்களில் பேட்டி ெகாடுப்பதோடு, தனது கடமையை முடத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பணியில் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால், நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க அரசு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

எட்டிப்பார்க்காத எம்எல்ஏ
ஒரு காலத்தில் ஆர்.கே.நகர் தொகுதி அம்மா தொகுதி என கூறி அமைச்சர்கள், அதிகாரிகள் இங்கு சுழன்று சுழன்று வேலை செய்தனர். ஆனால், இப்போது யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த தொகுதி எம்எல்ஏவாக  இருக்கும் டிடிவி தினகரன், இந்த பக்கமே வருவதில்லை. இங்கு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கிபோது, தொகுதி எம்எல்ஏ எட்டிக்கூட பார்க்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


Tags : RK Nagar ,bargaining ,RK Nagar Corona , RK Nagar,Corona Cases ,Officials ,not taking action
× RELATED ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி...