×

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு செல்ல இ-பாஸ் நிராகரிப்பால் டயாலிசிஸ் செய்ய முடியாமல் பெண் அவதி: ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதாக கலெக்டர் தகவல்

தா.பழூர்: அரியலூர் அருகே உடல்நிலை பாதித்த பெண்ணுக்கு டயாலிசிஸ் செய்ய தஞ்சை மருத்துவமனை செல்ல இபாஸ் கிடைக்காததால், அவர் தஞ்சை செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்த ராமதாஸ் மனைவி ராஜகுமாரி (47). இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் இ.பாஸ் பெற்று தஞ்சை தனியார் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஊரஜடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சிரமம் இன்றி சென்று வந்தார். தற்போது கொரோனா அதிகமாக பரவி வருவதால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் கும்பகோணம் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தஞ்சை மருத்துவ மனைக்கு டயாலிசிஸ் செய்ய செல்ல முடிய வில்லை. இந்நிலையில் படிப்பறிவு இல்லாத இந்த தம்பதி, தனது வீட்டின் அருகில் உள்ள படித்த இளைஞர்களின் உதவியை நாடி மொபைல் மூலம் இணையதளத்தில் இ.பாஸ் கேட்டு பதிவு செய்துள்ளார். 3 தினங்களாகியும் இ-பாஸ் கிடைக்கவில்லை. இது குறித்து கணவர் ராமதாஸ் கூறுகையில், உடல்நிலை மோசமான நிலையில் ராஜகுமாரி மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

உடனே இ-பாஸ் வழங்க வேண்டும். அதற்குள் எனது மனைவிக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்தான் காரணம். எங்களை போன்ற படிக்கத் தெரியாத ஏழை மக்களுக்கு எளிமையான முறையில் மருத்துவமனை சென்று வர உதவி செய்ய வேண்டும் என்றார். மருத்துவ சிகிச்சைக்கு கூட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பது கொரோனா பாதிப்பைவிட கொடுமையானது என பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இ பாஸ் விண்ணப்பிக்கும் போது, சிறு தவறு இருந்தால் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

சம்பந்தப்பட்டவர்கள் இ-பாஸ் கேட்டு பதிவு செய்ததில் ஏதேனும் தவறு இருந்திருக்கும், அதனால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். எந்த மாவட்டத்திற்கு செல்கிறோமோ அந்த மாவட்ட கலெக்டர் தான்  இ-பாஸ் வழங்க வேண்டும். இது மாதிாி அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு உடனே இபாஸ் வழங்க அறிவுரை வழங்கியுள்ளேன். உடனடியாக டயாலிசிஸ் சிகிச்சைக்காக ராஜகுமாரியை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.

Tags : Tanjore Government Hospital , Tanjore Government Hospital, e-Pass, Dialysis, Female, Awadhi
× RELATED தஞ்சையில் அரசு மருத்துவமனையின் சத்து...