×

சோளம் அறுவடை தீவிரம்: திருமங்கலம் கிராம விவசாயிகள் உற்சாகம்

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சோளம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குவிண்டால் நல்ல விலைக்கு போவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். மதுரை திருமங்கலம் சுற்று வட்டார கிராமங்களான சவுடார்பட்டி, தங்களாசேரி, மதிப்பனூர், மேட்டுபட்டி, கிழவனேரி, பொன்னம்பட்டி, பூசலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பயிரிடப்பட்ட சோளம் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. ஊரடங்கு சமயத்தில் கூட இந்த பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தில் சோளப்பயிர் வாடிவிடாமல் பார்த்து கொண்டதால் எதிர்பார்த்தது போலவே, தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.

தொடர்ந்து சோளயம் அறுவடையில் திருமங்கலம் பகுதி விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர். கொரோனா பரவுதல் காரணமாக முகக்கவசம் அணிந்து அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சோளம் குவிண்டால் 4 ஆயிரம் ரூபாய் வரை போகும் என எதிர்பார்க்கிறோம். திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சோளத்தை அனுப்புவோம். ஆனால், தற்போது பொதுபோக்குவரத்திற்கு தடையுள்ளதால் கொரோனா வைரஸ் தீவிரமாக இருப்பதாலும் அறுவடைக்கு பின்பு என்ன செய்வது என்ற கவலை எழுந்துள்ளது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சல் கிடைத்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றனர். 


Tags : Corn, Thirumangalam Village, Farmers
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு