×

சீன பொருளை புறக்கணிக்க அரசும் உதவ வேண்டும்: வி.கிருஷ்ணகுமார், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர்

தமிழகம் முழுவதும் ‘சீமா’வின் கீழ் சுமார் 300 பெரிய நிறுவனங்களும் அதை சார்ந்து சுமார் 15 ஆயிரம் சிறு நிறுவனங்களும் உள்ளன. நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் இந்நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனங்களின் முக்கிய உற்பத்தியே பம்புசெட் தயாரிப்புகள்தான். இது, விவசாயம் சார்ந்த தொழிலாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தியாவில், பல்வேறு தொழில் நிறுவனங்களின் மொத்த  உற்பத்தியில் பம்புசெட் உற்பத்தி 20 முதல் 25 சதவீதமாக உள்ளது.

இந்தியா - சீனா எல்லையில் போர் பதற்றம் காரணமாக சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற பேச்சு பரவலாக உள்ளது. அப்படி சீனா பொருட்களை முற்றிலும் தவிர்க்கமுடியுமா என்றால் அது மிகவும் கடினம்தான். உதாரணத்திற்கு, இந்திய அரசால் பெரிதும் முன்னெடுத்து செய்யக்கூடிய மேக் இன் இண்டியா திட்டம் மூலம் தயாரிக்கப்படுகிறது சோலார் பம்பு. ஆனால், இந்த சோலார் பம்புக்கான சோலார் பேனல், பம்பு கண்ட்ரோலர், பேட்டரி செல்கள் என அனைத்தும் சீனாவில் இருந்துதான் வாங்கவேண்டியுள்ளது. பம்புகள் மட்டுமே நாம் உற்பத்தி செய்கிறோம். சீனாவை தவிர்த்து பிற நாடுகளிலும் இந்த  பொருட்கள் கிடைக்கிறது. ஆனால், சீனா தருவதைப்போல் குறைவான விலையில் பிற  நாடுகளால் தர முடியாது.

உதாரணமாக, சீனாவில் ரூ.20க்கு கிடைக்கும் பொருள், பிற நாடுகளில் ஏன் இந்தியாவில்கூட ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால்தான், சீனாவை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ‘மேக் இன்  இண்டியா’ திட்டம் மூலம் நம் நாட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தாராளமாக உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து  அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்தால் இது சாத்தியம். பம்புகள் நாம் உற்பத்தி  செய்கின்றோம், அதற்கான கண்ட்ரோலர்களை உற்பத்தி செய்யாமல் பிற நாடுகளிடம் கையேந்த வேண்டியுள்ளது. இப்படி வாங்கி, அசெம்பிள் செய்தால், அது எப்படி ‘மேக் இன் இண்டியா’ திட்டமாக ஆகும். எனவே, மத்திய அரசு, மேக் இக் இ்ண்டியா திட்டத்தில் அனைத்து தொழில்களையும் ஒருங்கிணைத்து, ஊக்குவித்து, நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல், சீன பொருட்களை தவிர்ப்பது மிகவும் கடினமாகிவிடும். இதற்கு அரசின் ஊக்குவிப்பு அவசியம்.

சீனா பொருட்களை தவிர்க்கவேண்டும் என்றால் பிற நாடுகளில் இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைத்து, மானியம் கொடுத்தால் சீனாவின் விலைக்கே கொடுக்க வேண்டும். மேக் இன் இண்டியா திட்டம் முழுமையாக செயல்பட்டு, சீனாவை போல் பிற நாடுகளும் குறைந்த விலையில் பொருட்களை தந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். தொழில்துறையினர் இந்த திட்டத்தை முழுமையாக வரவேற்கின்றனர். இதற்கு மத்திய அரசு, முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்கவேண்டும் என்கிற மோகம்  யாருக்கும் கிடையாது. ஆனால், விலை குறைவு என்பதால் பலர் அந்த பக்கம் சாய்கின்றனர்.

இந்தியாவில் தயாரிக்கும் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும், அதன் தரம் மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்திய பொருட்களை ஒப்பிடும்போது சீன பொருட்கள் தரம் குறைந்தவைதான். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பம்புசெட்கள், நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்படுகிறது. இதேபோல் சீனாவால் தர முடியும். ஆனால் விலை அதிகம் என்பதால் சீனா இதனை  செய்வதில்லை. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்கள் சரியாக, குறைந்தது ஒரு ஆண்டு ஆகும். ஊரடங்கு கடுமையானால் இன்னும் காலம் தள்ளிப்போகும். சீனா பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றால் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் மூலப்பொருட்கள் வழங்க வேண்டும். சீனாவை தவிர்த்து, பிற நாடுகளில் பொருட்களை  வாங்கினால், அதற்கான மானியம் வழங்க வேண்டும். சீன பொருட்களை வாங்கவேண்டும் என்கிற மோகம் யாருக்கும் கிடையாது. ஆனால், விலை குறைவு என்பதால் பலர் அந்த பக்கம் சாய்கின்றனர்.

* சீன பொருட்களுக்கு மாற்று நம்மிடம் எதுவும் கிடையாது: டி.சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் தலைவர்
இந்தியா- சீனா எல்லை பிரச்னை வலுத்து வருகிறது. நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் தயாராகிவிட்டனர். இதன் காரணமாக, சீன பொருட்களை வாங்க வேண்டாம் என்று அதனை புறக்கணிக்கும் மனநிலையில் இந்திய நுகர்வோர்கள் தாமாக முன்வந்துள்ளனர். இது தான் உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று. நுகர்வோர்களாகிய மக்களின் இந்த மனநிலை ஏற்புடையதாக இருந்தாலும், அந்த அளவிற்கு சீன பொருட்களுக்கு மாற்று பொருட்கள் தற்போது இந்தியாவில் இல்லை. உற்பத்தி செய்யப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் உள்ளது.

மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா போன்ற அன்னிய நாடுகளில் இருந்து தான் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், கருவிகள், மின்சார மின்னனு சாதனங்கள், இரும்பு சாமான்கள், ரசாயனங்கள், உரங்கள், மருந்து மாத்திரை மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள், பிளாஸ்ட்டிக்குகள், கடிகாரங்கள், பொம்மைகள், அழகு சாதன பொருட்கள், செல்போன்கள், கணினிகள் அவற்றில் உள்ள பாகங்கள், கேமராக்கள், மசாலாக்கள் என ஏராளமான பொருட்கள் நமக்கு சீனாவில் இருந்து தான் வருகிறது. இதற்கெல்லாம் மாற்றும் நம்மிடம் கிடையாது.

எனவே தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தினை முன்னோடியாக ஊக்குவித்து, சீனா பொருட்களுக்கு மாற்று பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்தால் மட்டுமே இதுபோன்ற சீன பொருட்கள் புறக்கணிப்பை நம்மால் செயல்படுத்த முடியும். எனவே இந்த பொருட்களுக்கான மூலப் பொருட்கள்,உதிரி சாதனங்கள் தயாரிப்பை நாமே செய்வதன் மூலம், பொருட்கள் உற்பத்தியை தொடங்கினால், விலையும் குறையும்; தரமும் அதிகரிக்கும்; இந்தியாவின் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். நிறுவனங்களும் பெருகும்.

இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படும் பெரிய நிறுவனங்களில் மின் விசிறிகளின் உள்ளே உள்ள மோட்டர் முதல் முக்கிய பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக தான் உள்ளது. உற்பத்தியில் என்னவோ இந்தியாவில் தயாரிப்பதாக இருந்தாலும், அதனுடைய உபகரணங்கள் இன்னும் சீனாவில் தயாரிப்பவையாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த மோட்டார்கள் எல்லாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை தான். காலப்போக்கில் அது வேலை பளு அதிகம் மற்றும் உற்பத்தி விலை அதிகமாக உள்ளதாலும், சீன பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதாலும் அதை வாங்கி, அதனை வைத்து பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே அனைத்தையும் பழைய முறையில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, வியாபாரம் செய்தால் இந்தியாவிற்கும் பெருமை, நாட்டிற்கும் லாபம் கிடைக்கும்.

லேப்டாப், செல்போன் போன்ற பொருட்கள் எல்லாமே மேக் இன் இண்டியா திட்டத்தில் நாமே உற்பத்தி செய்ய முடியும். அதன் மூலம், எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல எதிர்காலத்தை நம்மால் தர முடியும்; அரசும் தன் சுயசார்பை  நிலைநாட்ட முடியும். தற்போது மக்கள் சீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவிற்கு வர்த்தகத்தில் பாதிப்பு இருக்கும். போர் வரும்போது மட்டும் நாம் பொருட்களை தவிர்க்க வேண்டாம். ஏன் என்றால் இன்று சீனா... நாளை வேறு நாடு என்று இருக்காமல் முற்றிலும் அன்னிய பொருட்களை தவிர்த்து நாம் உற்பத்தி செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இத்தருணத்தை பயன்படுத்த வேண்டும். எனவே சீன பொருட்களுக்கு மாற்று நம்மிடம் கிடையாது என்பதை உணர்ந்து அரசு உற்பத்திக்கு வழிவகை செய்ய வேண்டும். உற்பத்தியில் என்னவோ இந்தியாவில் தயாரிப்பதாக இருந்தாலும், அதனுடைய உபகரணங்கள் இன்னும் சீனாவில் தயாரிப்பவையாகவே இருக்கிறது.

Tags : Government ,V. Krishnakumar ,China ,South Indian Engineering Manufacturers Association ,Seema ,Chinese , V. Krishnakumar to help the state to boycott Chinese goods
× RELATED சீனாவுக்கு மீண்டும் செக் வைத்த...