×

‘மேக் இன் இண்டியா’ பேச்சோடு நிற்க கூடாது: விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர்

நமது ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவத்தினர் கொன்றுள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் கொந்தளித்து போயிருக்கின்றனர். இப்போது மக்கள் மனதில் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நம்முடைய இந்திய எல்லையிலே, சீனா ராணுவத்தை நிறுத்தி, பயங்கர ஆயுதங்களை வைத்து எங்கு பார்த்தாலும் அவர்களுடைய எல்லையாக தெரிய வேண்டும் என்று சீனா சூழ்ச்சி செய்து வருகிறது. இதனை நாம் முறியடிக்க, அடித்து விரட்ட வேண்டுமென்றால், நம்மிடம் வணிகம் என்ற மிக பெரிய ஆயுதம் உள்ளது.

இந்த வணிகத்தை வைத்து தான் உலகம் முழுவதும் எங்கும் சீன பொருட்கள் விற்பனையாகி வருகிறது. சீனா பொருட்கள் எதையும் வாங்குவதில்லை என்று முழுமையாக புறக்கணிப்போம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, இனி சீனா பொருட்களை வாங்குவதுமில்லை, விற்பதுமில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். உடனடியாக ஒரே அடியாக சீனா பொருட்களை நாம் குறைத்து விட முடியாது. படிப்படியாகத் தான் குறைக்க வேண்டும். குழந்தைகள் விளையாடக் கூடிய சீன டாய்ஸ் (விளையாட்டு பொருட்கள்) விற்பதை அடியோடு நிறுத்த முதற்கட்டமாக தீர்மானித்துள்ளோம். எந்த நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும், மக்கள் சீனா உற்பத்தி கிப்ட் பொருட்களையே வாங்கிச் செல்கின்றனர். இரண்டாம் கட்டமாக இந்த பொருட்களை நிறுத்த நாம் முடிவு செய்துள்ளோம்.

மூன்றாம் கட்டமாக பென்சில், பேனாக்கள், அதாவது படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தக் கூடிய அனைத்து சீன பொருட்களையும் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். நான்காவது கட்டமாகத்தான் எலக்ட்ரானிக் பொருட்கள், பல நிறுவனங்களுக்கு தேவையான உதிரி சாதனப் பொருட்கள் சீனாவில் இருந்து மட்டும் தான் வரும் நிலை உள்ளது. இதை முறியடிக்க பிரதமர் மோடி ‘மேக் இன் இண்டியா’ திட்டத்தை முழுமையாக அமல் படுத்தினாலே போதும்; பேச்சோடு நிற்காமல், இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நமது நாட்டு பொருளை முழுமையாக வாங்கி விற்பனை செய்யும் சூழலை உருவாக்குவதற்கு விலை ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. சீனா பொருட்களுக்கு ஒரு விலை உள்ளது. நமது பொருட்களுக்கு ஒரு விலை உள்ளது. நம்மை விட அவர்களின் பொருள் விலை குறைவு என்று மக்கள் நினைக்கிறார்கள். நம் பொருட்கள் விலை அதிகமாக உள்ளது. இதற்கு வியாபாரிகள் காரணமில்லை. உற்பத்தி செலவு மற்றும் வரி தான் அதற்கு காரணம், உற்பத்தியாளர்களும் காரணமில்லை, அரசு தான் காரணம். ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்ய பாகங்கள் வாங்குவதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.கட்டுகிறோம். அதை பொருளாக்கி விற்பனை செய்யும் போதும் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டுகிறோம். ஆகவே அந்த 18 சதவீத ஜி.எஸ்.டியை அரசு 13 சதவீதமாக குறைத்து 5 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி செய்தலே நாம் தயாரிக்கும் பொருட்களின் விலையும் குறையும்.

பின்னர் சீனப் பொருளுடன் இந்திய பொருளை தொடர்புபடுத்தி பார்த்தால் விலை குறைவாகவும், தரம் அதிகமாகவும் இருக்கும். எனவே பிரதமர் ‘மேக் இன் இண்டியா’ திட்டம் என்பது வாயோடும், அறிக்கையோடும் இல்லாமல், முழுமையாக செயல் வடிவம் கொடுக்க அரசு தான் ஊக்கமளிக்க வேண்டும். இன்று சீனா பொருட்களை புறக்கணிப்போம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். மக்கள் மனதில் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை வியபாரிகள் நாங்கள் பயன்படுத்தி கொண்டு சீன பொருட்களை முழுமையாக அகற்ற  தயாராக இருக்கிறோம். அரசு கட்டாயமாக ஒத்துழைக்க வேண்டும். இறக்குமதி நிறுத்தப்பட வேண்டும். கம்ப்யூட்டர், செல்போன் உதிரி பாகங்கள் எல்லாம் சீனாவில் இருந்து தான் வருகிறது நம்மிடம் இல்லை. நாம் உற்பத்தி செய்யவில்லை. உற்பத்தி திறன் இந்தியாவில் குறைந்துவிட்டது. இதற்கு, அரசு வட்டி விகிதத்தை முழுமையாக குறைக்க வேண்டும். வெளிநாடுகளில் இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்றால் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும். ‘மேக் இன் இண்டியா’ திட்டத்தை முழுமையாக அமல் படுத்தினாலே போதும்; நம் பொருட்கள் விலை குறைவாகவும், தரம் அதிகமாகவும் இருக்கும்.

* சீன பொருட்களை ஒதுக்க மக்கள் தயாராகி விட்டனர்:  முனுசாமி, தனியார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவன அதிகாரி
சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை விட சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வது தான் இந்தியாவில் அதிகம். இங்கிருந்து சீனாவிற்கு பஞ்சு, பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருள் தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவில் பொருட்கள் விலை குறைவு என்பதால் தான் அங்கிருந்து பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. அரசு சீன பொருட்களுக்கு தடை கொடுத்ததால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தனியார் ஏஜென்சியும் சரி, அவர்களுடைய வாடிக்கையாளர்களும் சரி மிகவும் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏற்கனவே, வாடிக்கையாளர்கள் சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பணம் கொடுத்து அது கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதற்குள் கொரோனா முழு ஊரடங்கு வந்துவிட்டது. கொரோனா முடிந்த பிறகு அதை வாடிக்கையாளர்களிடம் கொடுக்கலாம் என்றால் இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனால், சீன பொருட்களின் இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து முன்னதாகவே அரசு ஒரு முறையான அறிவிப்பை தெரிவித்து அதன்பின்னர் சீன பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்தால் எங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்காது.

சீனாபொருட்களை தடை செய்வது பெரிய விஷயம் கிடையாது. அதற்கு பதிலாக இந்தியாவில் அந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து அதன் பின்னரே தடை செய்ய வேண்டும். தரம் என்று பார்த்தால் இந்தியா, ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளே முதன்மையானதாக உள்ளது. எப்போது மக்கள் தரத்தை விட விலை குறைவாக கிடைக்கும் பொருட்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்களோ அப்போதே சீன பொருட்களின் மீதான கவனமும், இறக்குமதியும் அதிகரித்தது.
சீனாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால் தான் இங்கு உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தான் நாடு தற்போது உள்ளது. அரசு தளர்வுகளை ஏற்படுத்தி தொழிற்சாலைகளில் பொருட்களில் உற்பத்தி செய்ய கூறினாலும் கூட பெரு நிறுவனங்கள் சீனாவிடம் இருந்து உற்பத்தி செய்த மூலப்பொருட்கள் அனைத்தும் தற்போது துறைமுகத்தில் உள்ள இறக்குமதி பகுதிகளில் தேக்கம் அடைந்து உள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் போது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் சீனாவை விட இந்தியாவிடம் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் ஆவலாக உள்ளனர். சீன பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் எங்களை போன்ற நிறுவனங்களுக்கும் இதனால், பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் எங்களுக்கு வர வேண்டிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும். மாதம் 500 கன்டெய்னர் மூலம் பொருட்கள் இறக்குமதி செய்து வந்த நிலை போய், இனி வரும் காலங்களில் 100ஆக குறையும்.

இதனால், எங்களின் தொழில் முழுமையாக முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சீன பொருட்களின் இறக்குமதி என்பது நாட்டிற்கு நன்மை செய்யக்கூடிய விஷயமாக இருந்தாலும், இது சீனாவிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து அதை பயன்படுத்தும் தொழில்நிறுவனங்களுக்கும், இடைத்தரகர்களாக உள்ள எங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், எங்களை போன்ற நிறுவனங்களில் பணியாட்களை குறைப்பது, சம்பள குறைப்பு போன்ற பிரச்னைகள் எழும். இதேபோல், சீனாவின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக பொதுமக்கள் பலரும் சீன பொருட்களை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, சீன பொருட்களை பயன்படுத்தி வந்தவர்கள் அதை உடைத்து புறக்கணித்து வருகின்றனர். முழுமையாக சீன இறக்குமதி மீது அரசு தடை விதிக்கும் போது எங்களை போன்ற தனியார் ஏஜென்சிகள் மாற்று வழிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. சீன பொருட்களின் இறக்குமதியை இனி எப்போதும் அனுமதிக்க முடியாது என்று முடிவு செய்து விட்டால் அரசு அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் போது எங்களை போன்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயன் அளிக்கும். எப்போது மக்கள் விலை குறைவான பொருட்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்களோ அப்போதே சீன பொருட்களின் இறக்குமதியும் அதிகரித்தது.

Tags : India ,speech ,President , 'Make Mac India', Don't Speak, Wickremarajah,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...