×

அடுத்தடுத்து தொடரும் ஆழ்கடல் மரணங்கள்: மீனவர்கள் பாதுகாப்பில் அக்கறை அதிகரிக்குமா?

* பாதுகாப்பு உபகரணங்களின்றி செல்வதால் பாதிப்பு
* துயர வலையில் சிக்கித் தவிக்கும் மீன்பிடித் தொழில்

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள், படகு உரிமையாளர்களின் அலட்சியப்போக்கு, உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கடலுக்கு செல்வதே உயிரிழப்புக்கு முக்கிய காரணமென மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் மீன்பிடித்தொழில் பாதிப்பையே சந்திக்குமென எச்சரிக்கின்றனர்.
தமிழகத்தில் அதிகளவில் வருமானத்தையும், பெருமளவில் வேலை வாய்ப்பையும் வழங்கும் தொழில்களில் ஒன்றாக மீன்பிடித்தொழில் விளங்குகிறது.

ஒரு காலத்தில் அன்றாட வாழ்க்கையை ஓட்ட, மீன் பிடித்தல் என்றிருந்த நிலை மாறி, இன்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களின் அன்றாட தொழிலாகவே மீன்பிடித்தொழில் மாறி விட்டது. பாரம்பரிய மீனவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆயிரம் கோடி அன்னியச் செலாவாணியை அள்ளித்தரும் தொழிலாகவும் மீன்பிடித்தொழில் விளங்கி வருகிறது. அதே நேரம் படகில் சென்று கடலில் மீன்பிடித்து மீனவர்கள் உயிருடன் கரை திரும்புவது என்பது இத்தொழிலின் சாபக்கேடாகவும் உள்ளது.

கண்ணீர் கடலில்...
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இக்காலத்தில், கப்பல் போன்ற பெரிய அளவிலான இயந்திரப்படகுகளும், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளும் மீன் பிடித்தலுக்கு சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. திசை காட்டும் கருவி, இருப்பிடம் காட்டும் கருவி, தகவல் தொடர்பு கருவி என படகில் பல்வேறு நவீன வசதிகள் இருந்தாலும், ஆபத்து காலங்களில் படகில் செல்லும் மீனவர்கள் உயிருடன் திரும்புவது என்பது நிச்சயமற்றதாகவே இருக்கிறது. இதனால் முதல் நாள் கடலுக்கு செல்லும் மீனவர்கள், அடுத்த நாள் உயிருடன் திரும்பி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மீனவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் காத்திருக்கின்றனர். திரும்பாவிட்டால் கண்ணீர் கடலில் மூழ்கும் நிலைதான் உள்ளது.

2 லட்சம் மீனவர்கள்...
தமிழக கடல் பகுதியை பொறுத்தவரை, மீன்பிடி தொழிலில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய, இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் ஈடுபட்டு வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த சிறிய படகு, மிகக்குறைந்த குதிரைத்திறன் கொண்ட இயந்திரங்கள் அல்லாது தற்போது அதிகளவிலான குதிரைத்திறன் கொண்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பெரிய படகுகள் மீன்பிடித்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரம் மற்றும் இரும்பினால் கட்டப்படும் இந்த படகுகள்தான், தற்போது மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகிறது.

மூழ்கினால் அவ்வளவு தான்...
கடலில் மீன்பிடிக்க செல்லும் படகுகளில் மீன் பிடிக்க தேவையான நவீன கருவிகளும், மீன்கள் கெட்டுப்போகாமல் கரை வந்து சேருவதற்கு குளிர்பதன பெட்டி வசதிகளும் உள்ளன. ஆனால் மீனவர்களின் உயிரை பாதுகாப்பதற்கான மிதவை வசதிகள் எதுவும் படகில் இருக்காது. உரிமையாளர்கள் பல லட்சம் செலவழித்து படகு வாங்கினாலும், மீனவர்கள் படகில் கடலுக்கு சென்றால்தான் மீன் பிடிக்க முடியும். அவ்வாறு படகில் செல்லும்போது நடுக்கடலில் புயல் போன்ற இயற்கை சீற்றத்தினாலோ, படகு உடைந்து சேதமடைந்தோ கடலில் படகு மூழ்கினால் மீனவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். படகு கடலில் மூழ்கிவிட்டால் உயிர் காப்பு மிதவைகள் எதுவும் இல்லாத நிலையில் கைக்கு கிடைக்கும் பிளாஸ்டிக் கேன், மரப்பலகை போன்வற்றை மீனவர்கள் பற்றிக்கொண்டு நீந்தி கரை சேரும் நிலைதான் இன்று வரை உள்ளது.

3 பேர் மூழ்கி பலி
கடலில் மூழ்கும் மீனவர் உணர்வு இருக்கும் வரை கிடைத்ததை பற்றிக்கொண்டு நீந்த முடியும். உணர்விழந்து விட்டால் உடல் கடலுக்குள் மூழ்கிவிடும். பலத்த காற்று, கடல் சீற்றம் அதிகமாக இருந்தால் கடலில் மூழ்கும் மீனவர்களின் சடலம்தான் கரைவந்து சேரும். கடந்த 13ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 பேர் கடலில் மூழ்கினர். இவர்களில் மீனவர் சேசு மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். மலர்வண்ணன், ரெஜின் பாஸ்கர், ஆஸ்டின் சுசீந்திரன் ஆகியோர் கடலில் மூழ்கி, உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பரந்து விரிந்த கடலில் மூழ்கும் மீனவரை கண்டுபிடித்து மீட்பது என்பது மிகவும் கடினமானது. மீனவர்கள் உயிர்காப்பு மிதவைகளை கையாள்வதன் மூலம் கடலுக்குள் மூழ்குவது தவிர்க்கப்படும். மேலும், துரித நடவடிக்கையின் மூலம் இலகுவாக மீனவரை உயிருடன் மீட்கவும் முடியும்.

அக்கறையில்லா அரசு
உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையில், கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சில ஆயிரங்கள் செலவழித்து உயிர்காப்பு மிதவைகள் வாங்கி படகில் வைப்பதில் படகு உரிமையாளர்கள் அக்கறை காட்டுவதில்லை. உயிர்காப்பு மிதவைகளின் அவசியத்தை உணர்த்தி, இதனை கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவதிலும் மீன்வளத்துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மீன் பிடிக்க சென்று கடலில் மூழ்கி பலியாகும் மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையை வழங்கி விட்டு, அரசும் தனது கடமையை முடித்துக்கொள்கிறது. அதே நேரம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் திரும்ப உத்தரவாதம் அளிக்கும் வகையிலான எந்த முயற்சியும் அரசு தரப்பில் இதுநாள் வரை எடுக்கவில்லை.

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவிட மீன்வளத்துறையும், தமிழக மரைன் போலீசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதற்காக ஆண்டுதோறும் அதிகளவில் நிதி செலவிடப்படுவதாக கூறப்பட்டாலும், நடைமுறையில் எவ்வித செயல்பாடும் இல்லை என்பதும், வெறும் கண்துடைப்புதான் என்று மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.

விவசாயிகளும் மீனவர்களாய்...
விவசாயம் பொய்த்துப்போன நிலையில் விவசாயக்கூலிகள் பலரும் தற்போது மீன்பிடித் தொழிலாளர்களாக படகில் மீன் பிடிக்க செல்கின்றனர். கடலுக்கு மீன் பிடிக்க படகில் செல்லும் இவர்கள் பாதுகாப்புடன் கரை திரும்புவதும் இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. மீனவர்களின் அறியாமையை சாதகமாக்கிக்கொண்டு அதிகாரிகளும் மெத்தனமாக இருப்பதை தவிர்த்து, தங்களது கடமையை உணர்ந்து மீனவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலில் மூழ்கி பலியாகும் நிலை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுவது ஆட்சியாளர்களின் கையில்தான் உள்ளது.

உயிர்ப்பலிகள் தொடரும்பட்சத்தில் கடலுக்கு செல்ல மீனவர்கள் அஞ்சும் நிலை ஏற்படும். ஏற்கனவே இலங்கை கடற்படையின் அட்டகாசம், கடல் சீற்றம், கொராேனா ஊரடங்கு, மீன்பிடி தடைக்காலத்தால் மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மீனவர்கள் பலியாவது தொடர்ந்தால், பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மீன்வளத்துறை மீனவர்களின் பாதுகாப்பிற்கு, போதிய உத்திரவாதம் அளிக்க வேண்டு
மென பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.

செயல்படாமல் முடங்கிய ரோந்து மீட்பு படகுகள்
கடலில் ஆபத்து காலத்தில் உதவிடும் வகையில் உருவாக்கப்பட்ட மரைன் போலீசாரின் 1093 தொலைபேசி அழைப்பு எண், மரைன் போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து மீட்பு படகுகள், மீன்வளத்துறைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் அனைத்தும் செயல்படாமல் முடங்கிப்போனதால் அவசர உதவி மீட்பு பணிகளும் இன்றைய நிலையில் பூஜ்ஜியம்தான். கடந்த ஆட்சியின்போது அரசால் அறிவிக்கப்பட்ட அவசர காலங்களில் மீனவர்களுக்கு உதவிடும் வகையில் மீன்வளத்துறைக்கென தனியாக நவீன ரோந்து ஹெலிகாப்டர் வாங்கிடும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. மேலும் மீன்பிடி படகுகளுக்கு வாக்கிடாக்கி வழங்குவது, ஜிபிஎஸ் கருவி வழங்குவதாக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டமும் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

படகுகளில் உயிர்காப்பு மிதவைகள் கட்டாயம்
பொதுவாக, ஒரு படகுகளில் 4 முதல் 7 மீனவர்கள் வரை மீன் பிடிக்க செல்கின்றனர். படகில் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயிர்காப்பு மிதவைகள் படகில் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இதுநாள் வரை மீன்துறை நடவடிக்கை எடுத்தது கிடையாது. கடலோர காவல்படை, மீன்வளத்துறை இணைந்து மீனவர்களுக்கான உயிர்காப்பு மிதவைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது மட்டுமே ஆண்டுதோறும் நடக்கிறது. ஆனால் நடைமுறைப்படுத்துவது எட்டாக்கனியாகவே உள்ளது.

மீன்வளத்துறை அதிகாரிகள் கெடுபிடி காட்டுவார்களா?
உயிர்காப்பு மிதவைகளில் இரவு நேரத்திலும் ஒளிரும் தன்மை உள்ளது. உயிர்காப்பு ஜாக்கெட் அணிந்துக்கொண்டு அல்லது வளைய உயிர்காப்பு மிதவைகளை பிடித்துக்கொண்டு கடலில் குதிக்கும்போது, இரவு நேரத்திலும் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலமும் சர்ச் லைட் உதவியுடன் மீனவர்களை உடனடியாகவும், உயிருடனும் மீட்க முடியும். இதனை நடைமுறைப்படுத்த மீன்வளத்துறை அதிகாரிகள் அக்கறை காட்டுவது இல்லை. உயிர்காப்பு மிதவைகள் படகில் இருந்தால்தான் மீன் பிடிக்க செல்ல அனுமதி என்ற நடைமுறையை கொண்டு வந்தாலே இது சாத்தியமாகிவிடும்.

அரசு உதவ வேண்டும்
மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜ் கூறுகையில், ‘‘கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு படகிலும் உயிர்காப்பு மிதவைகள் வைத்திருக்க வேண்டும் என்று படகு உரிமையாளர்களிடமும், மீனவர்களிடமும் தெரிவித்து வருகிறோம். ஆனால் யாரும் செய்வதில்லை. மீனவர்கள் நலன் கருதி உயிர்காப்பு மிதவைகள் அரசு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். பல படகுகளில் வயர்லெஸ் வாக்கிடாக்கி இருப்பதால், ஒரு படகில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால், அருகே மீன் பிடிக்கும் படகுடன் வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு, உதவி கேட்கும்பட்சத்தில் மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு, ஆபத்தில் இருக்கும் மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் ராமேஸ்வரம் பகுதியில் அதிகளவில் நடந்துள்ளது. இருந்தாலும் படகில் உயிர்காப்பு மிதவைகள் இருந்தால் எவ்வித அச்சமும் இல்லாமல் படகில் மீன்பிடிக்க செல்ல முடியும். படகு உரிமையாளர்கள் அனைவரிடமும் அவரவர் படகுகளில் உயிர்காப்பு மிதவைகளை கட்டாயம் வாங்கி வைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

யானையே வாங்கியாச்சு? அங்குசத்துக்கு யோசிக்கலாமா?
ஒரு உயிர்காப்பு ஜாக்கெட்டின் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உள்ளது. வளைய உயிர்காப்பு மிதவை ஒன்றின் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உள்ளது. ஒரு படகில் 4 முதல் 7 மீனவர்கள் வரை கடலுக்கு செல்கின்றனர். இந்த எண்ணிக்கையில் உயிர்காப்பு மிதவைகள் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 வரை செலவிட்டாலே போதும். கடலில் மீன்பிடித்து வருவாய் ஈட்டித்தரும் மீனவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் குடும்பத்தினரின் நலனிற்காக படகு உரிமையாளர்கள் இந்த சிறிய தொகையை செலவிட்டாலே போதுமானது. ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து படகுகளை வாங்கும் உரிமையாளர்கள், உயிர்காப்பு மிதவைகளுக்காக சில ஆயிரங்களை செலவிடலாம்.
    
20 ஆண்டுகளில் ஆயிரம் பேர் பலி
உயிர் காப்பு மிதவைகள் இல்லாததால், படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி பலியான மீனவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் சென்ற படகுகளில் உயிர் காப்பு மிதவைகள் எதுவும் இல்லாததும், முறையான மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததும், இதற்கான காரணங்களாக முன் வைக்கப்படுகிறது. கடலில் மூழ்கிய பலியானவர்களில்  பலரின் உடல்கள் கடைசிவரை மீட்கப்படாமல் போனதும் உண்டு. பலியான மீனவர்கள் பலரின் குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி வீதிக்கு வந்த நிலையும் நடந்துள்ளது.

Tags : Deaths ,Deep Sea , Deep sea deaths, fishermen
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...