×

கொரோனா காலத்திற்கான குறுகியக் கால காப்பீடு திட்டத்தை ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிட காப்பீடு நிறுவனங்களுக்கு உத்தரவு

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறுகியக் காலப் பொதுக்காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை வடிவமைத்து வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிடக்கோரி காப்பீடு நிறுவனங்களுக்கு காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏ) உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தனிநபர்களுக்கு குறுகிய காலத்தில் மட்டும் பயன்படக்கூடிய வகையில் பொதுக்காப்பீடு திட்டத்தையும், மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்த காப்பீடு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம்(ஐஆர்டிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா காலத்தில் பயன்படும் இந்த மருத்துவக் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீட்டின் காலம் மூன்றரை மாதங்கள் ஆறரை மாதங்கள், ஒன்பதரை மாதங்கள் செல்லுபடியாகும் வகையில் இருத்தல் வேண்டும். காப்பீடு தொகையின் அளவு ரூ.50 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்க வேண்டும். கொரோனா கவாஸ் பாலிஸி என்ற பெயரில் நிறுவனத்தின் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த காப்பீடு திட்டத்தில் ப்ரீமியம் தொகை ஒருமுறை செலுத்தும் விதத்தில் மட்டுமே இருக்க வேண்டும். எந்த விதமான தள்ளுபடியும், முதல்கட்ட தவணை என்ற சலுகை ஏதும் இருக்கக்கூடாது.

மேலும், காப்பீடு செய்த நபர் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் அவருக்கான சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தரப்படும். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் காப்பீடு தொகை அளிக்கும் விகிதம், வீட்டில் சிகிச்சை எடுத்தால் காப்பீடு தொகை அளிக்கும் விகிதம் அனைத்தையும் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும். இந்த கொரோனா பாலிசியை வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் காப்பீடு நிறுவனங்கள் புதிதாக வடிவமைத்து வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Insurers ,Corona , Corona, Insurance
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...