×

வெளி மாவட்டம், வட மாநிலத்தவர்கள் வெளியேறியதால் கிராமப்புற பனியன் தொழிலாளர்களுக்கு கிராக்கி: அழைப்பு விடுக்கும் திருப்பூர் நிறுவனங்கள்

காங்கயம்: நாட்டின் வேறெந்த நகரங்களை விட பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை  உற்பத்தி மூலமாக தேசத்திற்கு அதிக அளவிலான அந்நிய செலாவணியை ஈட்டி தரும் மாநகரம் திருப்பூர். டாலர் சிட்டி என அழைக்கப்படும் இம்மாநகரம், தமிழகத்தில்  சென்னைக்கு அடுத்தபடியாக ெதாழில்துைறயில் சிறந்து விளங்குகிறது. பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் இங்கு  தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். காங்கயம், தாராபுரம், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதிகள் மற்றும்  திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இயங்கி வரும்  ஆயிரக்கணக்கான ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

கொரோனா தாக்கம் மற்றும் அதையொட்டிய ஊரடங்கால் தொழில்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் பின்னலாடை உற்பத்தி துறையும் அதில் தப்பவில்லை. நாடுகளுக்கிடையிலான விமான போக்குவரத்து  முடக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி  முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி அமலாக்கம் போன்ற பொருளாதார கொள்கைகளின் விளைவால் கடும் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் கொரோனா தாக்கமும் ஏற்றுமதி உற்பத்தியை புரட்டி போட்டுள்ளது.
தற்போது கோடைகால ஆடைகளுக்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க வேண்டிய பின்னலாடை உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் சந்தைகளுக்கான உற்பத்தி, முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரத்திற்குள் இருக்கும் நிறுவனங்களுக்கே இந்த நிலை என்றால் புறநகர் மாவட்ட நிறுவனங்களின் நிலை மேலும் மோசமாக உள்ளது. நிலைமை சரியாகும் வரை எப்படியாவது தாக்குப்பிடித்து தொழிலாளர்களை தக்கவைக்க வேண்டும் என்பதே தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கலாக உள்ளது. இதனால், அதிக கூலி மற்றும் லாபம் கிடைக்காத ஆர்டர்களை  திருப்பூர் நிறுவனங்களிடம் இருந்து பெற்று உற்பத்தி பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஆட்கள் கூலி போக, அசலுக்கு  பாதிப்பை ஏற்படுத்தாத முக கவச உற்பத்தியை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றன. மேலும், திருப்பூர் பனியன் கம்பெனிகளில் திருப்பூர் நகர் மற்றும் வட மாநிலங்கள், பிற மாவட்ட தொழிலாளர்களே அதிகம் வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் பனியன் கம்பெனிகளும் மூடப்பட்டன. இதனால் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும், வடமாநில தொழிலாளர்களும் சாரை சாரையாக தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் சில பனியன் கம்பெனிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால், நகரத்தில் இருக்கும் தொழிலாளர்களை வைத்தே கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே கடந்த 10, 15 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் கம்பெனிகளில் வேலை செய்துவிட்டு தற்போது, தங்களின் பகுதிகளில் செயல்படும் பனியன் கம்பெனிகளில் வேலை செய்யும் காங்கயம், குண்டடம், தாராபுரம், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட கிராம பகுதியில் வசிக்கும் கட்டிங் மாஸ்டர், டெய்லர் உள்ளிட்ட தொழிலாளர்களை திருப்பூர் பனியன் நிறுவனங்கள் தொடர்புகொண்டு வேலைக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இதனால் அவர்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
வடமாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் இப்போதைக்கு திருப்பூர் வர வாய்ப்பில்லை என்பதால் கட்டிங் மாஸ்டர்கள், டெய்லர்களுக்கான சம்பளமும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கயம் பகுதியை சேர்ந்த தொழில் முனைவோர் கூறியதாவது: கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்று பணிபுரிந்து வந்தோம். அப்போது கற்ற தொழில் நுணுக்கம் மூலமாக, கடந்த 5 வருடங்களாக சொந்த ஊரில் சிறிய அளவில் தொழில் நடத்தி வருகிறோம். திருப்பூர் சென்று வந்த சிலர், சொந்த ஊரில் வேலை கிடைப்பதால், இங்கேயே வேலை பார்த்து வருகின்றனர். ஊடரங்கு காரணமாக திருப்பூரில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் பாதி அளவில் சென்றுவிட்டனர். தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் சில நிபந்தனையுடன் கம்பெனிகள் இயக்கப்பட்டு வருகிறது. இவை, உள்ளூர் தயாரிப்புக்கு மட்டும் செயல்படுகிறது. இதில், லாபம் இல்லை என்றாலும், தொழிலாளர்களுக்கு வேலை தந்து வருகிறோம். மேலும் திருப்பூரில் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களில் சில வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், திருப்பூரை சுற்றியுள்ள பகுதியில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தும் வருகின்றனர். இவ்வாறு தொழில் முனைேவார் கூறினர்.


Tags : companies ,district ,pioneer workers ,Tirupur ,northerners , Outer District, Northern State, Rural Banyan Workers and Tirupur Organizations
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...