சாத்தான்குளம் வணிகர்கள் மர்மச்சாவு சென்னை புறநகர் பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் அடைப்பு: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஆவடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்வதாகக்கூறி வணிகர்கள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு அவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் பொய் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அதில், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் வணிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு நடத்தப்படும் என அதன் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.

 அதன்படி, நேற்று சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், குன்றத்தூர், மாங்காடு, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை, காய்கறி கடைகள்  மூடப்பட்டிருந்தன. மேலும், மருந்து கடைகளும் சில இடங்களில் குறிப்பிட்ட நேரம் மூடப்பட்டிருந்தது. சென்னையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வழக்கமாக காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என நினைத்து பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், மாலை 5 மணிக்கு புறநகர் பகுதியில் கடைகள் முன்பு வணிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்த இருவருக்கும் அஞ்சலி செலுத்தினர்.  

கருப்புக்கொடி  போராட்டம்

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை  கண்டித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில் வானகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளில் கருப்புக் கொடி கட்டியும், கருப்பு கொடிகளை ஏந்தியும் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>