×

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்கள் வெளியே வருவதில்லை: சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்கள் சில நாட்களாக வெளியே வருவதில்லை. இதனால், சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவு குறைவாக இருந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. சென்னையில் மட்டும் தினசரி நோய் பாதிப்பு 1500ஐ தாண்டி விட்டது. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தினசரி நோய் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியாக ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். மேலும், 15 மண்டலங்களுக்கு நோயாளிகளை கண்டறியவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை கவனிக்க ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் தனித்தனி குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு மாறாக, தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

இந்த நிலையில், சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக முதல்வர் கடந்த மாதம் 6ம்தேதி அறிவித்தார். அதன்படி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாநகராட்சியில் உள்ள 3, 4, 5 (மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம்) ஆகிய மண்டலங்களையும், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மண்டலம் 13, 14, 15 (அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மண்டலம் 8, 9, 10 (அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மண்டலம் 1, 2, 6 (திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர்), போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 7, 11, 12 (அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர்) ஆகிய மண்டலங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டது. ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து நோய் பாதிப்பு அதிகமானதால் கூடுதலாக அமைச்சர் பாண்டியராஜனும் இந்த குழுவில் இடம் பெற்றார்.இதையடுத்து அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களுக்கு தினசரி சென்று நோய் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது, கள ஆய்வு மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் தினசரி நோய் பாதிக்கும் பகுதிகளில் முகாமிட்டதால், அதிகாரிகளும் தங்கள் பணிகளை சரியாக செய்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 19ம் தேதி தனியார் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட அமைச்சர் ஜெயக்குமாரும் ஒரு வாரம் வடசென்னை பகுதிகளுக்கு செல்வதில்லை. எந்த கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளாமல் உள்ளார். போக்குவரத்து துறை அமைச்சரும் அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளுக்கு தினசரி செல்வதில்லை. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உணவு துறை அமைச்சர் காமராஜ், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களுக்கு சென்று வருகிறார்கள். அமைச்சர்கள் நேரில் சென்று கொரோனா வைரஸ் தொற்று ஒழிக்கும் பணிகளில் ஈடுபடாததால் சென்னையில் கொரோனா தொற்று குறைவதற்கு பதில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். அதேபோன்று இந்த மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் தினசரி நேரில் சென்று ஆய்வு பணிகளை செய்யாமல், அலுவலகத்தில் அல்லது வீடுகளில் இருந்தே சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் நம்பிக்கை இழப்பு
வழக்கமாக, கொரோனா வைரசை பொறுத்தவரை ஒரு பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, அதை தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். ஆனால், சென்னையில் கடந்த இரண்டு மாதமாகவே நாளுக்கு நாள் கொரோனாவின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பலி எண்ணிக்கையும் சென்னையில் தினசரி குறைந்தது 20 பேர் என்ற நிலை உள்ளது. இதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 4 பெரிய அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை நிரம்பி விட்டதால், புதிய நோயாளிகளை வீட்டில் இருந்தபடி அல்லது ஏதாவது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா வைரசை குறைக்க முடியும் என்று மக்கள் நம்பினார்கள். தற்போது அந்த நம்பிக்கையையும் பொதுமக்கள் இழந்துள்ளனர்.

Tags : ministers ,Some ,spread ,Chennai ,Ministers Committee ,Corona , Corona, Ministers Committee, Ministers Outside, Chennai, Corona, Risk
× RELATED தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்