×

அமெரிக்காவிடம் இருந்து தற்காப்பு ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தத்தை கைவிட்டது ஜப்பான்

டோக்கியோ: அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் ராணுவத்தை வலுப்படுத்தவும், கிழக்கு சீன கடல், தென் கடலோர பகுதியில் வட கொரியாவின் அச்சுறுத்தலை தவிர்க்கவும் அமெரிக்காவிடம் இருந்து இரண்டு பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க கடந்த 2017ல் ஜப்பான் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி தெற்கில் யமகுச்சி தளத்திலும், வடக்கில் அகிடா தளத்திலும் இரண்டு ஏவுகணைகளை நிறுத்தினால், நாட்டின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ கூறியதாவது: ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டத்தில்,  அமெரிக்காவிடம் இருந்து இரண்டு பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஏனெனில், 30 ஆண்டுகளுக்கு இதனை பராமரிக்க, நிர்வகிக்க ரூ 30,995 கோடி (4.1 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய நிதி சூழலில் இவ்வளவு பெரிய தொகையை ராணுவத்துக்கு செலவிட முடியாது என்பதால் இத்திட்டத்தை அரசு ரத்து செய்கிறது. ஏவுகணை வாங்கும் திட்டத்தை அரசு கைவிடுகிறது. அதே நேரம், வட கொரியாவின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் ஜப்பான் அரசு நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் இதர வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு கோனோ கூறினார்.

Tags : Japan ,US , Defensive Missile, Purchase Agreement, Japan
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!