×

திருநின்றவூர் பேரூராட்சியில் அதிகாரிகள் அலட்சியம் 2 வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சியில் 2 வாரத்திற்கு மேல் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருநின்றவூர் பேரூராட்சியில் உள்ள 18வார்டுகளில் 75ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய கொமக்கன்பேடு பகுதியிலிருந்து ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்து, குழாய்கள் மூலம் குடிநீர் பேருராட்சி பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட மேல்நிலை தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு குடிநீர் வாரத்திற்கு 3நாட்களுக்கு ஒருமுறை அனைத்து வார்டுகளுக்கும் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்கிடையில், பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், முருகேசன் நகர், அந்தோணி நகர், என்ஜிஓ நகர், லட்சுமிபுரம், தாசர் புரம், அம்பிகாபுரம், வச்சலாபுரம், சாமி நகர், தாமோதரன் நகர், கன்னியப்பன் நகர், சி.டி.எச் சாலை ஆகிய பகுதிகளில் 10ஆயிரத்து மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 30ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிக்கு முருகேசன் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டி மூலம் தெருக்களில் குழாய் வழியாக குடிநீர் 3நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதிக்கு கடந்த இரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் குடியிருப்போர் குடிநீர் வராததால், கேன் வாட்டர் மூலம் ரூ.35க்கு குடிநீரை கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் அனைத்து மக்களும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் குடும்பத்தை நடத்தவே ஏழை, நடுத்தர மக்கள் வருவாய் இன்றி அவதிப்படுகின்றனர். இவ்வேளையில் குடிநீருக்காகவும் தினமும் ஒரு குடும்பத்தினர் ரூ.70வரை செலவு செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், சிலர் பக்கத்து கிராமங்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் சென்று குடங்களில் தண்ணீரை எடுத்து வருகின்றனர். அப்போது கூட போலீசார், அவர்களை வழிமடங்கி ஊரடங்கு காலத்தில் வெளியே வர கூடாது என எச்சரிக்கை செய்கின்றனர். இது குறித்து மேற்கண்ட பகுதி சமூக ஆர்வலர்கள் திருநின்றவூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, இனி மேலாவது திருநின்றவூர் பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruninravur panchayat, officials, negligence, drinking water shortage
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...