×

உலகளவிலான ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது

புதுடெல்லி: கொரோனாவால் நேற்று ஒருநாள் உலகளவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்தது. கொரோனா பாதிப்பிலும், பலியிலும் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா போன்றவை உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், உலகளவில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்தது. உலகளவில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 92 லட்சத்து 69 ஆயிரத்து 74 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். மொத்தம் 4 லட்சத்து 76 ஆயிரத்து 445 பேர் பலியாகி இருந்தனர்.

நேற்று புதிதாக 86 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டனர். வழக்கமாக, பாதிப்பிலும், பலியிலும் முதலிடம் வகித்து வந்த அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் நேற்று பாதிப்பு குறைவாகவே இருந்தது. அமெரிக்காவில் நேற்று புதிதாக 13 ஆயிரத்து 802 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் 7,425 பேரும், பிரேசிலில் 6,082 பேரும் பாதிக்கப்பட்டனர். கடந்த மாதங்களில் இந்த நாடுகளில் தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது, அங்கு நோய் தொற்றின் வேகம் குறைந்திருப்பதை காட்டுகிறது.

ஆனால், நேற்று ஒரு நாளில் உலகளவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 15 ஆயிரத்து 380 பேருடன் இந்தியா முதலிடம் பிடித்தது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகமாகி வருவது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே, ஆகஸ்ட் இறுதியில் இந்தியாவில் 2.75 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : India , India, USA, Corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!