×

சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு : லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் காட்டம்; நேர்மையான நீதி விசாரணைக்கும் உத்தரவு

மதுரை : கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜூன் 26ந் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி அவர்களை கைது செய்த சாத்தான்குளம் போலீசார், காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி எஸ்பி  ஆஜராக உத்தரவு!


கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை, நீதிபதிகள் பிரகாஷ்,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காணொலி மூலம் இன்று மதியம் 12.30 மணிக்கு தமிழக டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையிட்டு இருந்தது.

லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!!

அதன்படி,தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி., காணொலி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினர். சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ்  மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பு விளக்கம் அளித்தது. இதை கேட்ட நீதிபதிகள், லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் இன்று பிறப்பித்த உத்தரவில், தந்தை, மகன் மரண விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும். உரிய நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது. கோவில்பட்டி நடுவர்நீதிமன்ற நீதிபதி சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் நடுவர்மன்ற நீதிபதி சாட்சிகளை விசாரிக்க வேண்டும்.

நடுவர்மன்ற நீதிபதி விசாரணையில் எந்தவித குறுக்கீடும் இருக்க கூடாது. சாத்தான்குளம் சம்பவம் போல்  தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கலாம். உயிரிழந்த இருவரின் உடற்கூறு ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்ய தூத்துக்குடி எஸ்.பி.க்கு உத்தரவிடப்படுகிறது. பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். உடற்கூறு ஆய்வு வீடியோ பதிவையும் ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடி எஸ்.பி. தாக்கல் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜூன் 26ந் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.உடல்களை அடக்கம் செய்வதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.


Tags : jail ,Magicalrates ,Magistrates ,lock-up deaths , Temple bar, jail, father, son, death, lock-up, judges, show, honesty, justice, inquiry
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!