×

மருத்துவ காப்பீடு திட்டத்தை புதுப்பிக்காததால் ஜூலை 1 முதல் அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிக்கல்: மாற்று அறிவிப்பை வெளியிடுமா அரசு?

விருதுநகர்: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 6 நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. எனவே, ஜூலை 1 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட உள்ளதால், தமிழக அரசு மாற்று அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன அரசு ஊழியர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டம் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான 4 ஆண்டுகளுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

காப்பீட்டு திட்டத்திற்கு ஒவ்வொரு ஊழியர் மாத சம்பளத்தில் ரூ.180 பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் பிரிமியத்திற்கு ரூ.342 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 59 வகை அறுவை சிகிச்சைகள், 54 வகையான நோய்களுக்கு சிகிச்சை என 113 நோய்களுக்கு, தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, பெங்களுர், டில்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுமார் ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். 4 ஆண்டுகளுக்கான மருத்துவ சிகிச்சை செலவினமாக ரூ.4 லட்சம், உறுப்பு மாற்று சிகிச்சை எனில் ரூ.7.50 லட்சம் வரை பெற முடியும். தற்போதைய காப்பீட்டு திட்டத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட, மருத்துவமனைகள் கூடுதல் தொகை வசூலிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும், இந்த காப்பீட்டு திட்டம் 30.6.2020ல் நிறைவடைய உள்ளது.

புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த 3 மாதங்களுக்கு முன்பாக ஒப்பந்தபுள்ளி கோரியிருக்க வேண்டும். ஆனால் காப்பீட்டு திட்டம் நிறைவடைய 6 நாட்கள் உள்ள நிலையில், இன்று வரை ஒப்பந்த புள்ளி கோரவில்லை. இதனால் ஜூலை 1 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிக்கல் உருவாகி உள்ளது. ஜூலை 1ம் தேதி நோய்வாய்ப்பட்டால் எந்த திட்டத்தில் சிகிச்சை பெறுவது என்ற கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் புதிய காப்பீட்டு நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யும் வரை சிகிச்சை பெற மாற்று ஏற்பாடுகளை அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு மாநில உறுப்பினர் கண்ணன் கூறுகையில், ‘‘நல்வாழ்வு காப்பீட்டு திட்ட ஒப்பந்தம் ஜூன் 30ல் முடிகிறது. புதிய நிறுவனத்திற்கான ஒப்பந்த புள்ளி மார்ச் மாதமே டெண்டர் விட்டு இருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இனி டெண்டர் விட்டு ஜூலை 1க்குள் புதிய ஒப்பந்தம் செய்வது சாத்தியமில்லை. காப்பீடு இல்லாத நிலையில், ஜூலை 1 முதல் மருத்துவ சிகிச்சை பெறுவது எப்படி என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் உள்ளது. மாநில அரசு உடனடி தீர்வாக சிகிச்சைக்கான மாற்று ஏற்பாடுகளை அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Government employees ,government , Problems of government, employees, receiving medical treatment, of July 1
× RELATED அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40%...