×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கலெக்டர்களுடன் முதல்வர் இன்று அவசர ஆலோசனை

* தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு
* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடையா?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் வருகிற 30ம் தேதியுடன் 5ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. ஆனால், கொரோனாவும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில், தமிழகத்தில் வருகிற 30ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. கலெக்டர்கள் கூறும் பரிந்துரைகள் அடிப்படையிலேயே தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது முடித்துக்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி வருகிற 29ம் தேதி அல்லது 30ம் தேதி அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் என்னதான் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது தமிழக அரசை மட்டுமல்ல, பொதுமக்களையும் குழப்பத்திலேயே ஆழ்த்தி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கைவிட சிறப்பான திட்டம் என்ன என்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Emergency consultation ,collectors , Tamil Nadu, Corona Vulnerability, Collector, CM, Consulting
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...