×

சென்னை செல்ல முடியாமல் தவிப்பு: கலெக்டரை சந்திக்க மாற்றுத்திறனாளி தங்கையுடன் வந்த பெண் விரட்டியடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கை, கால் செயிலிழந்த தங்கையுடன் வந்த பெண்ணை வாசலிலேயே பாதுகாவலர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் சுலோச்சனா(50). இவரது தங்கை லட்சுமி(45). மாற்றுத்திறனாளியான இவர் கை, கால் செயலிழந்து நான்கு சக்கர வீல் சேரில் மட்டுமே செல்ல முடியும். நெல்லையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்த இவர்கள், சென்னை செல்ல இ-பாஸ் வாங்க விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். நேற்று தனது தங்கை லட்சுமியை வீல்சேரில் தள்ளிக்கொண்டே கொளுத்தும் வெயிலில் சுலோச்சனா ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தாங்கள் சென்னை செல்வதற்கு உதவும்படி ஆட்சியரை சந்திக்க வந்ததாக நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர்களிடம் தெரிவிக்க, அவர்களோ கொரோனா நேரத்தில் யாரையும் சந்திக்க முடியாது.

சென்னைக்கு இ-பாஸ் எதுவும் கிடையாது என்று வாசலோடு விரட்டியடித்தனர். பின்னர், நீண்டநேரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த இருவரும், எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்து சுலோச்சனா கூறுகையில், எனது தங்கைக்கு கை, கால் செயிலிழந்ததால் சிகிச்சைக்காக நெல்லை அருகே உள்ள ஏர்வாடி தர்காவிற்கு கடந்த மார்ச் மாதம் துவக்கத்தில் சென்றோம். பின்னர், ஊருக்கு புறப்படும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், எங்களை அருகில் உள்ள காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தர்காவில் தங்க வைத்தனர். தற்போது, ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்ததால் சொந்த ஊருக்கு புறப்பட முயன்றோம். நெல்லையிலிருந்து விழுப்புரம் வரை எப்படியாவது வந்து சேர்ந்துவிட்டோம். தற்போது, சென்னைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம், என்றார்.

Tags : Chennai , Archives, Chennai Virattiyatippu
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...