×

கொரோனாவால் விலை வீழ்ச்சி காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருச்சி: கொரோனாவால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரை நிர்வாணத்தில் வந்து காய்கறிகளை கலெக்டர் அலுவலகம் முன் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கால் திருச்சி மாவட்டத்தில் வாழை மற்றும் காய்கறிகள் விலை மொத்தமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெண்டைக்காய் கிலோ ரூ.2க்கும், ஒரு எலுமிச்சை பழம் 50பைசாவுக்கு விற்பனையாகிறது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.காட்டு விலங்குகள் பயிரை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வராததால் திருச்சியில் வாழை உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகிறது. கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரும் வகையில் மேட்டூர் அணையில் 15ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50 விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மூட்டை மூட்டையாக கொண்டு வந்த வெண்டைக்காய், எலுமிச்சை பழங்களை சாலையில் கொட்டி அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டிஆர்ஓ பழனிகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : coroner ,road Farmers ,road , Farmers' half-naked, struggle,coroner's, dropping vegetables ,road
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்