வெறிச்சோடிய மணிகர்னிகா, அரிச்சந்திரா படித்துறைகள் பரபரப்பை இழந்தது வாரணாசி மயானம்: பிரதமரின் தொகுதிக்கு ஊரடங்கு தந்த வெகுமதி

* இறப்பு அதிகரித்தும் இல்லை வருமானம்

* பிணம் எரிப்பவர்களுக்கு நேர்ந்த சோகம்

சென்னை: கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்தியாவின் மிகப் பிரபலமான மயானங்கள், ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால், பிணம் எரிப்போர், வருவாய் பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்றனர். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால்தான், இறக்கும் தருவாயில் உள்ள முதியோர்களை தங்க வைப்பதற்கு என்றே இடங்கள் இங்கு உள்ளன. இது மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இறந்தவர்களின் சடலங்களையும் வாரணாசிக்கு கொண்டு வருகின்றனர். கங்கைக்கரையில் 88 படித்துறைகள் உள்ளன. இதில் மிகப் பிரபலமானவை வாரணாசியில் உள்ள மணிகர்னிகா, அரிச்சந்திரா படித்துறைகள். இந்த 2 படித்துறைகளிலும் மயானங்கள் உள்ளன. சடலங்களின் வருகையால் இவை எந்த நேரமும் பரபரப்போடு இருக்கும்.

எந்த நேரமும் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் இந்த மயானங்கள், 800க்கும் மேற்பட்ட டோம் இன குழுக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கின்றன. இவர்கள் அரிச்சந்திரா படித்துறையில் உள்ள மயானத்தை ஒட்டிதான் வசிக்கின்றனர். ஆனால், கொரோனாவுக்கு பிறகு நிலைமை தலைகீழாகி விட்டது. முதன் முதலாக கடந்த ஏப்ரல் 3ம் தேதி, கொரோனாவால் இறந்தவரின் சடலம் இங்கு கொண்டுவரப்பட்டது. கவச உடை அணிந்த சிலர் சடலத்தை கொண்டு வந்து, அரிச்சந்திரா மயானம் அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் வைத்து எரிந்து விட்டு சென்று விட்டனர். எந்த சம்பிரதாய களேபரமும் இன்றி முடிந்தது இறுதிப்பயணம். ‘‘இறந்தவர்களின் உறவினர்கள் சில சமயம் எங்களுக்கு பணம் கொடுக்கின்றனர். அதை வாங்கக்கூட  தயக்கம் இருந்தது. உறவினர்கள் சடலத்தை தொட்டிருக்கலாம். அவர்கள் தரும் பணம் மூலம் எங்களுக்கும் தொற்று பரவலாம் என்று பயம்.

இவ்வளவு ஏன்? கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எரிக்கும்போது வரும் புகை மூலம் கொரோனா பரவி விடுமோ என்ற அளவுக்கு அஞ்சிக்கிடந்தோம்’’ என மயானத்தை ஒட்டி வசிக்கும், சடலம் எரிக்கக்கூடிய டோம் இனக்குழுவை சேர்ந்த சிலர் கூறுகின்றனர். ‘‘மணிகர்னிகா மயானத்துக்கு தினமும் சராசரியாக 80 முதல் 100 சடலங்கள் வருவதுண்டு. தற்போது 30 சடலங்கள் வருவதே அரிதாக உள்ளது. காலை முதல் காத்துக்கிடந்தாலும் சில சமயம் 7 அல்லது 8 சடலங்கள்தான் வருகின்றன. கொரோனாவால் இறந்தவரின் சடலமாக இருந்தால், அதை எரியூட்டும் வாய்ப்பு எங்களுக்கு இல்லை. மறு பிறவி இருக்காது என்ற நம்பிக்கை காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சடலங்கள் கொண்டு வருகின்றனர். ஆனால், ஊரடங்கால் எல்லைகள் மூடப்பட்டதால், வெளி மாநிலங்களில் இருந்து சடலங்கள் வருவது நின்று விட்டது’’ என சடலம் எரிப்போர் கூறுகின்றனர்.

மயானத்தை சுற்றியுள்ள 800 பேருக்கும் பிணம் எரிக்கும் வாய்ப்பு தினமும் கிடைப்பதில்லை. சுழற்சி முறையில்தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு சடலத்தை எரியூட்ட ரூ1,300 வழங்கப்படும். ஆனால், சடலத்தை எரியூட்டும் பணியில் உள்ளவருக்கு இதில் ஒரு பகுதி தொகைதான் கிடைக்கும். தற்போது வருமானம் சுத்தமாக இல்லை. காலை முதல் காத்திருந்தும், ஒரே ஒரு சடலம்தான் வந்தது. கூலியாக. ரூ650 கிடைத்தது. சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 10 சடலங்கள் வரை எரிக்க வாய்ப்பு கிடைக்கும் என, சடலம் எரிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவிக்கிறார். மொத்தத்தில், 24 மணி நேரமும் கனன்று கொண்டிருந்த வாரணாசியின் பிரபலமான மயானங்கள், ஊரடங்கால் பரபரப்பின்றி காலி மைதானம் போல காட்சி அளிக்கின்றன. கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை உயர்ந்தாலும், இந்த மயானத்தில் இவர்களுக்கு வேலை இல்லை. ஊரடங்கு முடிந்தால்தான் சடலம் வரும்; சம்பாதிக்க முடியும். அதுவரை என்ன செய்வது என்ற தவிப்புடன் நாட்களை நகர்த்தும் மயான ஊழியர்களின் மனதில், எதிர்காலம் குறித்த அச்சம் மயான அமைதியாய் குடிகொண்டுள்ளது.

* வாரணாசியில் உள்ள மயானங்களில் தினமும் எரிக்கப்படும் சடலங்கள் சுமார் 200க்கும் மேல். இதில் மணிகர்னிகா மயானத்துக்கு 80 முதல் 100 சடலங்கள் வரும். ஆண்டுக்கு சுமார் 28,000 சடலங்கள் எரிக்கப்படுகின்றன.

* மணிகர்னிகாவில் உள்ளது ‘பணக்கார’ விஐபி மயானம். இங்கு மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, அமெரிக்காவில் இருந்து கூட சடலங்களை கொண்டு வருவார்களாம். வருவோரின் நிதி நிலைக்கு ஏற்ப பிணம் எரிக்கும் கூலி நிர்ணயிக்கப்படுவதுண்டு.

* இங்குள்ள மயானத்தில் டோம் இனக்குழுவை சேர்ந்த சிலர் 12 வயதிலேயே பிணம் எரிக்கும் தொழிலுக்கு வந்து விடுகின்றனர்

* சடலம் எரிப்பவர்களுக்கு டோம் ராஜாவாக ஒருவர் இருப்பார். வாரணாசியில் மோடியின் வேட்பு மனுவை முன்மொழிந்த 4 பேரில், டோம் ராஜா ஜகதீஷ் சவுத்ரியும் ஒருவர்.

ரேஷன் நிவாரணம் கிடைக்கல

ஊரடங்கின்போது பெரும்பாலான மாநிலங்கள் ரேஷன் பொருட்களை இலவசமாக அறிவித்தன. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.65 கோடி ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே இலவச பொருட்கள் விநியோகம் என உ.பி. அரசு அறிவித்தது. இவற்றில் பெரும்பாலானவை அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் உள்ள கார்டுகள். எனவே, வருமானம் இல்லாதபோதும், பொது விநியோக திட்டத்தில் உள்ள 12 கோடி பேர் காசு கொடுத்து ரேஷன் பொருட்களை வாங்க நேர்ந்துள்ளது என சோகத்துடன் கூறுகின்றனர் பிணம் எரிக்கும் தொழிலில் உள்ள குடும்பத்தினர்.

Related Stories:

>